
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் நடந்த மடப்புரம் கோயில் காவலாளி அஜித்குமார் மரணம் தொடர்பாக பரபரப்பு குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இந்த வழக்கில் காவல்துறையினர் சித்திரவதை செய்து கொலை செய்ததாக மருத்துவ அறிக்கையில் உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து, காவல்துறையில் அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. 5 பேர் கைது செய்யப்பட்டனர். போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ்ராவத் இடமாற்றம் செய்யப்பட்டு, கட்டாய காத்திருப்போர் பட்டியலில் சேர்க்கப்பட்டார். மானாமதுரை டிஎஸ்பி சண்முகசுந்தரமும் பணியிலிருந்து நீக்கப்பட்டார். மேலும் இந்த வழக்கு தற்போது சிபிஐக்கு மாற்றப்பட்டிருக்கிறது.
இந்நிலையில், இந்த வழக்கில் முக்கிய சாட்சியாகத் தோன்றிய நிகிதா மீது புதிய குற்றச்சாட்டுகளை இந்திய ஃபார்வர்ட் பிளாக் கட்சியின் நிறுவனர் திருமாறன் ஜி எழுப்பியுள்ளார். “21 ஆண்டுகளுக்கு முன்பு நிகிதா செய்த திருமண மோசடி வழக்கில் நானும் ஒரு பாதிக்கப்பட்டவன்தான். பலரைத் திருமணம் செய்து, பிறகு வரதட்சணை வழக்குகள் போட்டு பணம் பறித்தவர்தான் இவள். 2004-ல் 10 லட்சம், 20 லட்சம் என சட்டம் மூலமாக பணம் வசூலித்தார்” என அவர் குற்றம் சாட்டினார்.

மேலும், நிகிதாவின் குடும்பமே மோசடி கும்பல் என திருமாறன் தெரிவித்தார். வேலை வாங்கித் தருவதாக கூறி ஏமாற்றிய சம்பவங்கள் ஏராளமெனவும், இவர்களுக்கு காவல்துறையிலும் தலைமைச் செயலகத்திலும் செல்வாக்கு உள்ளது என்றும் கூறினார். “நிகிதா எழுதிய வாய்மொழி புகாரால் அஜித்குமார் உயிரிழந்தார். பழிவாங்கும் நோக்கில் போலி புகாரை எழுப்பி, இளைஞரின் உயிரை பறித்துள்ளனர்” என்றார்.
அஜித்குமார் மரண வழக்கில் தொடர்ந்து புதிய திருப்பங்கள் நடைபெற்று வரும் நிலையில், இந்த வழக்கை தொடுக்க உத்தரவிட்ட அதிகாரி யார் என்பதற்கான கேள்வியும் எழுந்துள்ளது. இதையடுத்து, சிவகங்கை மாவட்டத்தில் அதிமுகவினர் “யார் அந்த அதிகாரி?” எனும் வாசகத்துடன் பதற்றம் ஏற்படுத்தும் வகையில் சுவரொட்டிகள் ஒட்டியுள்ளனர். சம்பவம் தொடர்பாக மாநில அரசியலும் குமிழி விடத் தொடங்கியுள்ளது.