வீடுகளில் சூரிய ஒளியின் மூலம் மின் உற்பத்தி செய்யும் சோலார் பேனல் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நோக்கில், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களில் வரும் ஜூலை 7 (திங்கட்கிழமை) சிறப்பு முகாம் நடைபெற உள்ளது என்று மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் அகிலாண்டேஸ்வரி தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு மின் பகிர்மான கழகம் நடத்தும் இந்த சிறப்பு முகாமில், வீடுகளில் சோலார் பேனல் அமைப்பதற்கான விண்ணப்ப முறை, வங்கி கடன் உதவி, அரசின் மானியங்கள், மின் உற்பத்தி மூலம் பெறும் நன்மைகள் போன்றவை குறித்து முழுமையான விளக்கங்கள் வழங்கப்படும். இதில் அங்கீகாரம் பெற்ற சோலார் நிறுவனங்களின் பிரதிநிதிகளும், மின்வாரிய அலுவலர்களும் நேரில் வந்து வழிகாட்ட உள்ளனர்.

இந்த சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ள இடங்கள்:
🔹 திருநெல்வேலி கிராமப்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவகம் – தியாகராஜநகர்
🔹 திருநெல்வேலி நகர்புற கோட்ட செயற்பொறியாளர் அலுவகம் – கே.டி.சி.நகர்
🔹 வள்ளியூர், கல்லிடைக்குறிச்சி, தென்காசி, கடையநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய ஊர்களில் உள்ள மின்வாரிய செயற்பொறியாளர் அலுவகங்கள்

முகாம் நடைபெறும் நேரம்: காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை.

இதனால், திருநெல்வேலி மற்றும் தென்காசி மாவட்டங்களைச் சேர்ந்த பொதுமக்கள், அரசின் மானியம் பெற்று வீடுகளில் சோலார் பேனல்கள் நிறுவும் திட்டத்தில் பங்குபெற விருப்பமுள்ளவர்கள், இந்த முகாமில் கலந்துகொண்டு முழுமையான தகவல்களைப் பெற்றுச் செல்லலாம் என மின் வாரியம் தெரிவித்துள்ளது.