
மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனில், சிமன்கஞ்ச் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பேர் – மனைவி, மகள் மற்றும் மகன் திடீரென காணாமல் போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காணாமல் போனவர்கள் வீட்டிலிருந்து ரூ.4.75 லட்சம் பணமும் மாயமாயிருப்பதாக கூறப்படுகின்றது. இது தொடர்பாக பாதிக்கப்பட்ட நபர், பாஜக வாக்குச்சாவடி தலைவர் தீபக் சர்மா, ஜூன் 1ஆம் தேதி காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார்.
தீபக் சர்மா, தான்ச் பவனில் வசித்து வருகிறார். அவரது மனைவி சீமா (45), மகள் பாலக் சர்மா (21) மற்றும் மகன் ருத்ரா சர்மா (14) ஆகியோர் கடந்த ஜூன் 1ஆம் தேதி, “ஒரு உறவினரின் திருமணத்திற்கு செல்கிறோம்” என்று கூறி வீட்டை விட்டு சென்றதாக கூறப்படுகிறது.
ஆனால் அதற்குப் பிறகு அவர்கள் வீட்டிற்கு திரும்பவில்லை. தீபக் தனது பணிக்கு காலை சென்றபோது அவர்கள் வீட்டிலிருந்தனர். ஆனால் மாலை திரும்பி வந்த போது வீடு பூட்டப்பட்டிருந்ததாகவும், சாவி பக்கத்து வீட்டாரிடம் இருந்ததாகவும் தெரிவிக்கிறார்.
தீபக் அவர்களின் மனைவிக்கும் மகளுக்கும் பலமுறை தொலைபேசியில் அழைத்தபோதும், அவர்கள் இருவரின் மொபைலும் அணைக்கப்பட்டிருந்ததாக கூறுகிறார். நான்கு நாட்கள் கழிந்தும் எந்தத் தகவலும் இல்லாததால், காவல் கட்டுப்பாட்டு அறைக்கு நேரில் சென்று, குடும்பத்தினரை கண்டுபிடிக்க கோரிக்கை வைத்துள்ளார்.
அவர் கூறுகையில், வீட்டில் இருந்த பணம் ரூ.4.75 லட்சமும் காணவில்லை. எனவே அந்த பணத்தை அவரது குடும்பத்தினரே எடுத்துச் சென்றிருக்கலாம் என சந்தேகிக்கிறார்.
இந்த வழக்கில், சிமன்கஞ்ச் காவல் நிலையம் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்தி வருகிறது. கூடுதல் எஸ்பி நிதேஷ் பார்கவா தெரிவித்ததாவது, காணாமல் போனவர்கள் பணம் எடுத்துச் சென்றதாகத் தெரியக்கூடிய எந்த உறுதியான ஆதாரமும் கிடைக்கவில்லை என்றும், வீட்டைச் சுற்றி அண்டை வீட்டாரின் வாக்குமூலங்களில் தீபக் சர்மாவின் நடத்தை குறித்து சில பிரச்சனைகள் இருப்பதும் தெரியவந்துள்ளதாகவும் கூறினார்.
அவரது குடும்பத்தினர் மனவேதனையால் வீட்டை விட்டு சென்றிருக்க வாய்ப்புள்ளதாகவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். விசாரணை தீவிரமாக நடந்து வருகின்றது.