ராஜஸ்தான் மாநிலம் கரௌலி மாவட்டத்தில் சம்பவமொன்று சமூகத்தில் பெரும் அதிர்வலைகளை  ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் பரவிய வீடியோவில், கோபமடைந்த தாய் ஒருவரால், தனது சிறிய மகன் கொடூரமாக தாக்கப்பட்ட சம்பவம் பதிவாகியுள்ளது. அந்த  வீடியோவில், சிறுவன் ஒரு சின்ன தவறை செய்ததற்காக தாய் கையில் இருந்த பாத்திரத்தால் அடிக்கிறார். சிறுவன் “மன்னிக்கவும் அம்மா” என அழுதபோதும், தாய் தனது தாக்குதலைத் தொடருகிறார். அதோடு காலால் எட்டியும் உதைக்கிறார்.

இந்த வீடியோவை, அந்தக் குடும்பத்திலுள்ள ஒருவர் பதிவு செய்ததாகத் தெரிகிறது. மேலும், வீடியோவில் அந்த தாய் தனது கணவருடனும் சண்டை போடுவதை காண முடிகிறது. குழந்தையை அடித்ததற்காக ஒருவர் அவளை எதிர்த்தபோது, அவர், “அவன் என் பையன், நான் விரும்பினால் கொன்றுவிடுவேன்” என கூறியிருப்பதும் அந்தக் காணொளியில் இடம் பெற்றுள்ளது. இதன் மூலம், ஒரு பெற்றோர் தனது பிள்ளைக்கு ஏற்படுத்தும் உளவியல் மற்றும் உடல் பாதிப்புகள் குறித்து சமூகத்தில் பெரும் கவலை எழுந்துள்ளது.

 

 

இந்தக் காட்சிகள் ராஜஸ்தானின் கரௌலி மாவட்டத்தில் பதிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. வீடியோவில் உள்ள நபர்களின் அடையாளம் இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தப்படவில்லை. இந்த சம்பவம் குழந்தை பாதுகாப்பு தொடர்பான விதிமுறைகள் மற்றும் பெற்றோரின் பொறுப்புகள் குறித்து புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது. மேலும் குழந்தை நலன் பாதுகாப்பு அமைப்புகள் மற்றும் சட்ட அமலாக்கத்துறை இந்த வீடியோவின் அடிப்படையில் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என சமூக ஊடகங்களில் பலரும் வலியுறுத்தி வருகின்றனர்.