
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே உள்ள மடப்புரம் காளி கோவிலில் காவலாளியாக பணியாற்றிய அஜித் குமார் மீது நகை திருட்டு புகார் அளித்த நிகிதா என்ற பேராசிரியைக்கு எதிராக புதிய புகார்கள் அணுக்கணுக்காக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
முதலில், நகை திருட்டு புகார் அளித்ததன் பிறகு, அஜித் குமார் போலீசாரிடம் வாக்குமூலம் அளிக்க அழைக்கப்பட்ட நிலையில் காவலில் மரணமடைந்தார். இந்த மரணம் தமிழகமெங்கும் பெரும் அதிர்ச்சியையும், போலீசாரின் நடவடிக்கையைக் குறித்து கேள்விகளை எழுப்பியது.
இந்த நிலையில், நிகிதா மீது கடந்த ஆண்டு அரசு வேலை வாங்கித் தருவதாக ரூ.16 லட்சம் வரை மோசடி செய்ததாக, மேலும் சில ஆண்டுகளுக்கு முன்பே ரூ.25 லட்சம் வரை மோசடியில் ஈடுபட்டதாகும் புகார்கள் மீண்டும் வெளிவந்துள்ளன.
மதுரை மாவட்டம் திருமங்கலம் தாலுகா காவல் நிலையத்தில் 2010ம் ஆண்டு நிகிதா மற்றும் அவரது தாயார் சிவகாமி அம்மாள் மீது அரசு வேலை வாங்கித் தருவதாக பலரை ஏமாற்றியதாக புகார் பதிவு செய்யப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன. நிகிதாவின் தந்தை ஓய்வு பெற்ற துணை கலெக்டர் ஜெயபெருமாள் என்றும் உறவினர்கள் தெரிவிக்கின்றனர்.
மதுரை மாவட்டம் தேங்கல்பட்டி பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகையில், பேராசிரியர் வேலை வாங்கித் தருவதாக நம்பிக்கையுடன் ரூ.25 லட்சம் கொடுத்தோம். ஆனால் வேலை கிடைக்காததுடன் பணத்தையும் திரும்பக் கொடுக்காததால் மோசடி வழக்காக மாறியதாக தெரிவித்தனர்.
திருமங்கலத்தை சேர்ந்த நிகிதாவின் உறவினர் ஒருவர், “நான் என் உறவினரான நிகிதாவிடம் 2010-ல் ரூ.9 லட்சமும், என் மற்றொரு உறவினருக்கான கிராம நிர்வாக அலுவலர் வேலையுக்காக ரூ.7 லட்சமும் கொடுத்தோம். ஆனால் எதுவும் நடக்காமல் பணத்தை திரும்பக் கேட்கும் போது மிரட்டல் அளித்தார்” என கூறி, சாட்சியம் அளித்துள்ளார்.
புகார்களின் தொடர்ச்சியில், நிகிதா நேற்று விளக்கம் அளித்துள்ளார். அதில், “நான் தலைமறைவாக இல்ல. வீட்டில்தான் இருக்கிறேன். போலீசாரின் விசாரணைக்கு ஒத்துழைப்பு தருகிறேன். அஜித் மரணத்தில் நானும் என் தாயாரும் மனமுடைந்துள்ளோம். நகை திருட்டு சம்பவம் தொடர்பாக எந்த சதி முயற்சியும் இல்லை. எனது மீது கூறப்படும் அரசு வேலை மோசடி குற்றச்சாட்டுகள் பொய்யானவை” என்று தெரிவித்தார்.
இந்நிலையில், நிகிதா தற்போது சொந்த ஊரில் இல்லாமல், கைதுக்கு பயந்து ஊர் ஊராக சுற்றுகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. நெட்டிசன்கள் கூறுவதின்படி, இவர் கோவையில் தங்கியிருக்க, அதை நேரில் பார்த்தவர்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை என குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில் திண்டுக்கல் அரசு மகளிர் கல்லூரி தாவரவியல் HOD ஆன நிகிதா, தனது பணிகளை முறையாக செய்யாதது, கல்லூரி நிர்வாகத்திற்கு கட்டுப்படாதது என அடுக்கடுக்கான புகார்களில் சிக்கி, அவரை இட மாற்றம் செய்ய மாணவிகள் கோரிக்கை வைத்ததன் அடிப்படையில் கடந்தாண்டு மே மாதம் கல்லூரிக் கல்வி இணை இயக்குநருக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.
அது தொடர்பாக விசாரணை நடத்திய இணை இயக்குநர், நிகிதா மீதான குற்றச்சாட்டுகளை உறுதி செய்து கல்லூரிக் கல்வி இயக்குநருக்கு விரிவான அறிக்கை அனுப்பியுள்ளார். அந்த அறிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், தற்போது நடவடிக்கை எடுக்கப்படலாம் என தகவல் வெளியாயுள்ளது.