ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறுமி தற்கொலை செய்ததை தொடர்ந்து, உரிய நடவடிக்கை எடுக்காமல் காவல் துறையினர் அலட்சியம் காட்டுவதாகக் கூறி, மாணவியின் தந்தை சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.

இந்த மனுவின் விசாரணைக்குள், பெண் சிறப்பு உதவி ஆய்வாளரே மற்றொரு பெண்ணுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நீதிபதி வேதனை தெரிவித்தார்.

புதன்கிழமை நடைபெற்ற விசாரணையில், கிருஷ்ணமூர்த்தி என்ற நபர் தாக்கல் செய்த மனுவில், “கடந்த  மே மாதம், என் 17 வயது மகள் தற்கொலை செய்துக்கொண்டார். அதற்கான காரணம், எங்கள் வீட்டருகே வசிக்கும் தாவூத் இப்ராஹிம் பாலியல் தொல்லை அளித்ததுதான் எனக் கண்டறிந்தோம்.

இந்தக் குற்றச்சாட்டுக்கு எதிராக கேணிக்கரை போலீசாரிடம் புகார் அளித்தோம். ஆனால், அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப் பதியாமல், குண்டர் தடுப்புச் சட்டம்  பயன்படுத்தப்பட்டது. மேலும், இப்ராஹிம் தகாத வீடியோ வெளியிடுவதாக மிரட்டினார். இதனால், மகளின் உடலை பெற மறுத்தேன். ஆனால், போலீசாரின் மிரட்டலால் இறுதிச் சடங்கை நடத்தினேன்” என கூறியிருந்தார்.

மேலும், கடந்த ஜூன் 5ஆம் தேதி, தாவூத் இப்ராஹிமின் குடும்பத்தினர் வீட்டை காலி செய்யுமாறு தங்களை மிரட்டியதாகவும், அதைத் தொடர்ந்து மீண்டும் புகார் அளித்தபோதும், கேணிக்கரை காவல் ஆய்வாளர் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் ஒருதலைப்பட்சமாக நடந்துகொள்கிறார் எனவும் மனுவில் குற்றம்சாட்டப்பட்டிருந்தது. எனவே, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி, நீதிபதிகள் உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதி புகழேந்தி முன் விசாரணைக்கு வந்தபோது, கேணிக்கரை காவல் ஆய்வாளர் தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. விசாரணைக்குப் பிறகு, நீதிபதி தனது உத்தரவில், “இந்த விசாரணை அறிக்கை, நீங்கள் இந்தப் பதவிக்கு தகுதியற்றவர் என்பதையும், உங்கள் திறமையின்மையையும் வெளிப்படுத்துகிறது.

ஒரு பெண் சிறப்பு உதவி ஆய்வாளராக இருந்தும், இன்னொரு பெண்ணுக்கு நேர்ந்த அநீதிக்கு நீங்கள் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது வேதனைக்குரியது. இந்த வழக்கில் விரிவான உத்தரவு பிறப்பிக்கப்படும்” என்று தெரிவித்தார். வழக்கு ஜூலை 14ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.