மத்தியப்பிரதேச மாநிலத்தின் ஜபல்பூரில் நிகழ்ந்த ஒரு அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 22 வயது பொறியியல் படித்து வந்த இஷிதா சாஹு, தனது நண்பரும் அண்டை வீட்டார் மகளுமான 23 வயது BBA மாணவி ஷ்ரத்தா தாஸ் மீது ஆசிட் வீசி தாக்கியுள்ளார். இந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை இரவு நேரத்தில் நடந்துள்ளது.

பாதிக்கப்பட்ட ஷ்ரத்தா தாஸ் தற்போது பலத்த தீக்காயங்களுடன் ஜபல்பூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில், இந்த தாக்குதல் தானாக நிகழவில்லை என்பது தற்போது தெரிய வந்துள்ளது.

விசாரணையின் போது, இஷிதா சாஹு, தாஸ் மீது நீண்ட நாட்களாக பொறாமையில் இருந்து வந்ததாகவும், அவர் படிப்பில் பெறும் வெற்றியும், அவரது அழகும் சமூகத்தில் ஈர்ப்பை ஏற்படுத்துவதாக நினைத்ததாலேயே திட்டமிட்ட முறையில் ஆசிட் வீசியதாக கூறியுள்ளார். மேலும், சமீபத்தில் இணையத்தில் வைரலான தனது காதலனுடன் எடுத்த வீடியோவில் ஷ்ரத்தா பின்னணியில் இருப்பதாக சந்தேகித்ததாலேயும் தாக்குதல் முடிவெடுக்கப்பட்டது என்று போலீசார் தெரிவித்தனர்.

தாக்குதலுக்கான ஆசிட் வாங்குவதற்காக, இஷிதா ஒரு தனியார் கல்லூரியின் போலி அடையாள ஆவணங்களை தயாரித்துள்ளார். ஆனால், கடைக்காரர் ஆவணங்களில் சந்தேகம் கொண்டதால் ஆசிட் வழங்க மறுத்துள்ளார். பின்னர், தனது நண்பரான அன்ஷை ஒரு பேராசிரியராகப் பேச வைத்ததன் மூலம், ஜபல்பூர் சிவிக் சென்டரில் உள்ள அனுப்ராஷ் என்டர்பிரைசஸ் என்ற கடையிலிருந்து 500 மில்லி ஆசிட் வாங்கியுள்ளார்.

தாக்குதல் நிகழ்ந்த உடனே ஷ்ரத்தாவை அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இஷிதா சாஹுவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளனர். இதற்கிடையில், இஷிதாவுக்கு ஆசிட் வாங்க உதவியதாகக் கூறப்படும் அன்ஷை போலீசார் தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் சமூக ஊடகங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி, மாணவியர் மற்றும் இளைஞர்களிடையே விருப்பங்களையும் வெற்றியையும் பொறாமையால் எப்படி அழிக்க முயற்சிக்கிறார்கள் என்பதை பற்றிய அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. காவல்துறை விரைவில் மேலதிக நடவடிக்கைகளை மேற்கொண்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்யும் பணியில் தீவிரமாக செயல்பட்டு வருகிறது.