திருப்புவனம் போலீஸ் நிலையத்தில் கொடூர தாக்குதலால் உயிரிழந்த தற்காலிக காவலாளி அஜித்குமார் சம்பவம் தமிழகத்தை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் உள்ள மடப்புரம் காளியம்மன் கோவிலில் பணியாற்றிய அஜித்குமாரிடம், தரிசனத்திற்காக வந்த நிகித்தா என்ற பெண், தனது காரை பார்க் செய்ய உதவி கேட்டதாக கூறப்படுகிறது.

பின்னர் காருக்குள் இருந்த 10 பவுன் நகைகள் காணவில்லை எனக் கூறி, நிகித்தா போலீசில் புகார் அளித்ததையடுத்து, அஜித்குமாரை காவல்துறையினர் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர். விசாரணை என்ற பெயரில் அஜித்குமார் மீது போலீசார் தாக்கியதாக நடத்தியதாக வீடியோ காட்சிகள் வெளியாகி, சமூக ஊடகங்களில் பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, சம்பந்தப்பட்ட 5 போலீசாரும் இடைநீக்கம் செய்யப்பட்டதுடன், அவர்களில் சிலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மக்கள் மத்தியில் எழுந்த கோபம், சமூக நீதிக்கான அழைப்பாகவும், காவல்துறையின் செயல்பாடுகள் மீதான கேள்விகளாகவும் பெருகி வருகின்றன. இந்தச் சம்பவம் தொடர்பாக நிகித்தா வெளியிட்ட வீடியோவில், “தாயாரின் உடல்நிலை காரணமாக நகையை பையில் போட்டு காரில் வைக்க நேர்ந்தது” என கூறியுள்ளார். அதே நேரத்தில், கோவிலுக்குள் செல்வதற்காக மூன்றாம் நபரிடம் காரை பார்க் செய்ய சொல்லியதையும் விளக்குகிறார். இது, உண்மையிலேயே நகைதிருட்டு நடந்ததா, அல்லது ஒரு தவறான சந்தேகத்தால் ஒருவர் உயிரிழந்தாரா என பெரிய கேள்விக்குறியாய் இருக்கிறது.

தற்போது இந்த சம்பவம், அதிகாரபூர்வ அனுமதியின்றி செயல்பட்ட தனிப்படைகளை உடனடியாக கலைக்க DGP உத்தரவு பிறப்பிக்க வைக்கும் நிலைமையை உருவாக்கியுள்ளது. காவல்துறையின் விசாரணை முறைகள் மீதான நம்பிக்கையை இழக்கும் வகையில், திருப்புவனம் காவலாளி மரணம் மிகுந்த சோகத்தையும், கோபத்தையும் ஏற்படுத்தியுள்ளது.