ஒடிசாவில் அரசு அலுவலகத்தில் ரத்னாகர் சாஹூ என்பவர் கூடுதல் செயலாளராக வேலை பார்த்து வருகிறார். இவர் சம்பவநாளில் பணியிலிருந்த போது சில மர்மநபர்கள் அவருடைய அலுவலகத்திற்கு சென்று அவரை அடித்து கொடூரமாக தாக்கி அலுவலகத்தின் வெளியே இழுத்து வந்துள்ளனர். இந்த சம்பவம் வீடியோவாக இணையத்தில் வைரலான நிலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தை அறிந்த முன்னாள் முதல் மந்திரி நவீன் பட்நாயக் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அவர் “அரசு  அதிகாரி தாக்கப்பட்டது பாஜக பிரமுகரின் முன்னிலையில் நடந்ததாகும். இவருக்கும் கட்சி எம்எல்ஏ வுக்கும் தொடர்பு இருக்கிறது. சம்பவ நாளில் அந்த அரசு அதிகாரி மக்களின் குறைகளை கேட்டுக் கொண்டிருந்தபோது சில மர்மநபர்கள் அவர் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்”என்று கூறியுள்ளார்.

இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இதைத்தொடர்ந்து நேற்று இரவு பிஜு ஜனதா தள தொண்டர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அவர்களை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர். மேலும் இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் அரசு அதிகாரி மீது தாக்குதல் நடத்திய மர்ம நபர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மேலதிகாரி தெரிவித்துள்ளார்.