சேலம் மாவட்டம் காமக்காபாளையம் கிராம நிர்வாக அலுவலகத்தில் பிரபு(30) என்பவர் கிராம நிர்வாக அலுவலராக வேலை பார்க்கிறார். அங்கு வேல்முருகன்(44) என்பவர் கிராம உதவியாளராக வேலை பார்க்கிறார். இந்த நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த கண்ணையன் என்பவர் தனது நிலத்தை அளப்பதற்காக கிராம நிர்வாக அலுவலகத்திற்கு சென்றுள்ளார்.

அப்போது பிரபுவும் வேல்முருகனும் 10 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டதாக தெரிகிறது. இதுகுறித்து கண்ணையன் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு போலீசாரின் அறிவுரைப்படி ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கண்ணையன் பிரபு மற்றும் வேல்முருகன் ஆகியோரிடம் கொடுத்துள்ளார்.

அப்போது அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். இதுகுறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் இருவரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.