பிரிட்டன் யூட்யூபராகவும், ஆன்லைனில் தவறான கருத்துகளை பரப்புவதில் பெயர் பெற்றவராகவும் விளங்கும் மைல்ஸ் ரட்லெட்ஜ், இந்தியர்களை குறிவைத்து இழிவுபடுத்தும் வகையில் வெளியிட்டுள்ள X பதிவு தற்போது சமூக ஊடகங்களில் பெரும் கண்டனத்தை உருவாக்கியுள்ளது.

அதாவது இந்தியர்கள் நேர்முகத் தேர்வுகளில் பொய்யாக பதிலளிக்கிறார்கள், அவர்களிடம் உடல் சுத்தம் இல்லாது, ஆங்கிலம் பேச தெரியாது, மேலும் அவர்களின் உச்சரிப்பை Google குழுவினரால் சகிக்க முடியவில்லையெனக் கூறியுள்ளார்.

 

மேலும் Google HR துறையில் உள்ள தனது நண்பரிடம் இருந்து பெற்ற தகவலின் அடிப்படையில், “80% விண்ணப்பங்கள் இந்தியர்களிடமிருந்து வருகிறது. அதில் பெரும்பாலானோர் நம்பமுடியாத அளவிற்கு பொய் கூறுகிறார்கள்” எனவும் பதிவிட்டுள்ளார்.

மேலும் அவர் கூறியதாவது, “ஒருவர் தன்னை Google நிறுவனத்தவரின் சகோதரனாக கூறினார், மற்றொருவர் CEO-வுக்கு வேலை வாங்கித் தந்ததற்காக நன்றி எதிர்பார்ப்பதாகக் கூறினார்” என  பதிவிட்டுள்ளார்.

அதோடு மட்டும் நிற்காமல், இந்தியர்களை ‘சமூகமாக பொய்கள் பேசுபவர்கள்’ என்றும், ‘மேற்கத்தியர்களைப் போல நேர்மையாக இல்லாதவர்கள்’ என்றும் சாடியுள்ளார். இந்தக் கருத்துகள் மீது பல்வேறு சமூக ஊடக பயனர்கள் கண்டனம் தெரிவித்து, இது பாசிசம், இனவெறி மற்றும் தொழில்துறை பாகுபாடாகும் என கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மைல்ஸ் ரட்லெட்ஜின் சர்ச்சைகள் இதுவே முதல் முறை அல்ல. ஏற்கனவே கடந்த 2021ஆம் ஆண்டு தாலிபான்கள் ஆட்சியை கைப்பற்றியபோது அவர் உள்நாட்டில் இருந்து மீட்கப்பட்டார். 2023ல் தாலிபான் இன்டலிஜன்ஸ் அவரை தற்காலிகமாக கைது செய்தது.

இந்த சர்ச்சைக்குப் பிறகு தற்போது இந்தியர்களை குறிவைத்து பேசியிருப்பது அவரது நம்பிக்கையின்மையும், ஆழ்ந்த இனவெறியும் என்பதை மீண்டும் வெளிக்கொணர்ந்துள்ளது. மேலும் இவரைப் போன்றவர்கள் தொழில்முறை நிறுவனங்களை வைத்து இந்தியர்களை அவமதிக்க முயல்வது வருந்தத்தக்கதெனக் கூறி வருகின்றனர்.