
பாகிஸ்தான் பிரதமர் ஷெஹ்பாஸ் ஷெரீப், ஈரான் தலைநகர் தெஹ்ரானில் புதிய ஜனாதிபதி மசூத் பெஷேஷ்கியனை சந்தித்து உரையாற்றினார். பின்னர் கூட்டு செய்தியாளர் சந்திப்பில், இந்தியாவுடன் காஷ்மீர், நீர் பிரச்சனை, பயங்கரவாதம் மற்றும் வர்த்தகம் உள்ளிட்ட விஷயங்களில் அமைதியாக பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளோம் என தெரிவித்துள்ளார்.
இதற்கு பதிலாக ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி கமேனி, இந்தியா–பாகிஸ்தான் இடையிலான மோதல்கள் முடிவடைவதை வரவேற்பதாக கூறினார்.
IRNA என்ற ஈரான் அரசு ஊடகம் வெளியிட்ட தகவலில், ஜனாதிபதி பெஷேஷ்கியன், இந்தியாவுக்கும் பாகிஸ்தானுக்கும் இடையில் நீடித்த அமைதி ஏற்பட வேண்டும் என கூறி, இருநாடுகளும் பேசிக் கொள்வது நல்லதென்று வலியுறுத்தினார்.
ஆனால், இந்தியா ஏற்கனவே பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் மற்றும் பயங்கரவாதம் குறித்த பிரச்சனைகள் தவிர வேறு எந்த விஷயத்திலும் பேச்சுவார்த்தை நடத்த முடியாது எனத் தெளிவாக தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், கடந்த மாதம் பஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் 26 பேர் உயிரிழந்ததைத் தொடர்ந்து, மே 7-ஆம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ எனும் நடவடிக்கையின் கீழ் பாகிஸ்தானில் பயங்கரவாத முகாம்களை தாக்கியது.
அதற்கு பதிலாக, பாகிஸ்தான் இந்திய ராணுவ தளங்களை குறிவைத்து தாக்க முயற்சி செய்தது. ஆனால், இந்திய ராணுவம் அதற்கு கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் ஷெரீப்பின் அமைதிப் பேச்சு குறித்த உரை சர்வதேசத்தில் கவனத்தை ஈர்த்துள்ளது.