பீகார் மாநிலம் பாகல்பூரில் உள்ள பகுதியில் அமைந்துள்ள பஜ்ரங்க்பலி கோவிலில், அடையாளம் தெரியாத ஒரு பெண் கோவில் உள்ளே புகுந்து, அங்கு வைக்கப்பட்டிருந்த அனுமனின் சிலையிலிருந்து வெள்ளி காதணிகள், வெள்ளிப் புனித நூல், கால் காப்பு உள்ளிட்ட நகைகளை திருடி சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் மே 19ஆம் தேதி நடந்ததாகக் கூறப்படுகிறது, ஆனால் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.

திருட்டை மேற்கொண்ட அந்த பெண், கோவிலின் அனுமன் சிலையின் காதில் இருந்த வெள்ளி காதணிகள் மற்றும் பாதங்களில் இருந்த வளையல்களை தயக்கமின்றி அகற்றிய காட்சிகள் தெளிவாக பதிவாகியுள்ளது. பின்னர் கோவிலுக்கு வெளியே சென்று, தனது செருப்புகளை அணிந்துவிட்டு, கோவில் வாசலில் வைத்திருந்த சில பொருட்களையும் எடுத்துக்கொண்டு நவ்கச்சியா ஜீரோமைல் நோக்கி தப்பிச் சென்றுள்ளார்.

இதற்கிடையில், இது அந்த கோவிலில் நடந்த முதல் திருட்டு அல்ல என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு முன்பும், அந்த பஜ்ரங்க்பலி கோவிலில் அனுமனின் கிரீடம் திருடப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், நவ்கச்சியா பகுதியில் உள்ள பல கோயில்கள் தொடர்ந்து திருடர்களால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், இதனையடுத்து காவல்துறையினர் பலரை கைது செய்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது. தற்போது அந்த பெண்ணை அடையாளம் காணும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.