
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அருகே உள்ள கதிரம்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சசிகலா என்பவர் பெயரில் சமீபத்தில் பெற்ற பட்டாவில், பெயர் மூன்று முறை தவறாக குறிப்பிடப்பட்டிருந்தது.
இதனை திருத்துவதற்காக அவரது கணவர் வடிவேல் ஆன்லைன் வாயிலாக விண்ணப்பித்தார். பட்டா திருத்தம் குறித்து வீரணகுப்பம் கிராம நிர்வாக அலுவலர் அகத்தூயவனை தொடர்பு கொண்டபோது, அவர் பணம் தர வேண்டும் என கூறியதாகவும், ரூ.4,000 லஞ்சம் கேட்டதாகவும் புகார் வந்தது.
வழக்கம்போல் முதலில் ஒத்துழைக்கக் கூடியவனாக நடித்து, பின்னர் லஞ்சம் கொடுக்க விரும்பாத வடிவேல், கிருஷ்ணகிரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறையில் புகார் அளித்தார். அதன் அடிப்படையில் போலீசார் ரசாயனப் பவுடர் தடவிய பணத்தை வடிவேலிடம் வழங்கி, அதை கிராம நிர்வாக அலுவலரிடம் கொடுக்க ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, ஊத்தங்கரை தாலுகா அலுவலகத்தில் ஜமாபந்தி பணியில் இருந்த அலுவலரை சந்தித்த வடிவேல், ரூ.4 ஆயிரத்தை வழங்கினார். அந்த பணத்தை அகத்தூயவன் வாங்கி எண்ணி தனது பாக்கெட்டில் வைத்தவுடன், அருகில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் விரைந்து சென்று அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.