
அமெரிக்காவின் ஒரு பத்திரிகை நிறுவனத்தில் பணியாற்றிய கார்சன் ப்ரீ என்ற பெண், திடீரென வேலைநீக்கம் செய்யப்பட்டார். நிறுவனத்தில் சரியான பயிற்சி, வழிகாட்டல் இன்றி பணியை துவக்கியதாகவும், வேலை தொடர்பான தகவல்களும் உதவிகளும் சரியாக வழங்கப்படவில்லை என்றும் அவர் கூறினார். ஒரு வீடியோ அழைப்பில், மேலாளர் லிசா அவரது வேலை “சரியாக பொருந்தவில்லை” என்ற காரணத்தால் நீக்கப்படுவதாக அறிவித்தார். அதற்கு கார்சன், தன்னிடம் எந்த பின்னூட்டமும் வழங்கப்படவில்லையென கூறி தனது கருத்துகளை உருக்கமாக தெரிவித்தார்.
கார்சன் ப்ரீ, தனது மேலாளரிடம் நேரடியாக எதிர்த்து, “நீங்கள் ஒரு நல்ல குழுவை கட்டியெழுப்ப விரும்பினால், உங்கள் தலைமையில் தெளிவும், ஆதரவும் இருக்க வேண்டும்” என கூறினார். தாமதமான கட்டுரை வெளியீடு, எழுத்துப் பிழைகள் ஆகியவை அவரது கட்டுப்பாட்டில் இல்லாத விஷயங்களாக இருந்ததை விளக்கியுள்ளார். மேலும், சரியான பயிற்சி, பயன்பாட்டிற்கான கணக்குகள் வழங்கப்பட்டிருந்தால், தன்னால் சிறப்பாக வேலை செய்ய முடிந்திருக்கும் என்றும் கூறினார்.
இந்த வீடியோ தற்போது டிக்டாக்கில் வைரலாகி உள்ளது. அதிகமான சமூக ஊடக பயனர்கள் கார்சன் ப்ரீயை பாராட்டி வருகின்றனர். “நீங்கள் மிகவும் நேர்த்தியாக உங்க உரிமையைப் பேசினீர்கள்”, “மேலாளரின் பதில்கள் குழப்பமாக இருந்தது” என பலரும் கருத்து தெரிவித்துள்ளார். இது, வேலைவாய்ப்பில் ஊழியர்களின் உரிமை மற்றும் மேலாளர்களின் பொறுப்பு குறித்து சமூகத்தில் ஒரு முக்கிய உரையாடலாக மாறியுள்ளது.