பாகிஸ்தானில் சிந்து நதியின் குறுக்கே கால்வாய் கட்ட பாகிஸ்தான் அரசாங்கம் முன்மொழிந்ததைத் தொடர்ந்து  மக்களிடையே கடும் எதிர்ப்பு உருவாகியுள்ளது. இந்த திட்டம் சிந்தின் நீர்வளத்தை பறிக்கிறது எனக் கண்டித்து பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இந்த சூழலில், பாகிஸ்தான் ஜனாதிபதி ஆசிப் அலி சர்தாரியின் மகளும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஆசிஃபா பூட்டோ பயணித்த வாகனத் தொடரணியை போராட்டக்காரர்கள் முற்றுகையிட்டதில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் ஹைதராபாத் அருகே நடந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆசிஃபா பூட்டோ நவாப்ஷா நோக்கி சென்றபோது, சாலைமறியல் செய்த பொதுமக்கள், அவரது வாகனங்களை தாக்கி “சிந்து தண்ணீரை பாதுகாக்க வேண்டும்” என்ற கோஷங்களை எழுப்பினர். விரைவாக நடவடிக்கை எடுத்த போலீசார், ஆசிஃபாவை பாதுகாப்பாக அங்கிருந்து வெளியேற்றினர். சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த சர்ச்சைக்குரிய திட்டம் சிந்துவின் விவசாய நிலங்களை பாதிக்கும் என்று எதிர்ப்பாளர்கள் கூறுகின்றனர். அரசாங்கம் இதை வளர்ச்சித் திட்டமாக விளக்கினாலும், மக்கள் அதை தண்ணீர் கொள்ளை திட்டமாகவே பார்க்கின்றனர்.

 

கடந்த வாரம் சிந்து உள்துறை அமைச்சரின் வீட்டுக்கும் தாக்குதல் நடத்தப்பட்ட நிலையில், இனி மேலும் இந்த எதிர்ப்பு நாடு முழுக்க பரவக்கூடிய அபாயம் உள்ளது என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.