ராஜஸ்தானின் அல்வார் மாவட்டத்தில் உள்ள எஸ்.கே.ஜுவல்லர்ஸ் தங்க கடைக்கு கடந்த செவ்வாய் கிழமை பெண் வாடிக்கையாளர் ஒருவர் சென்றிருந்தார். அவர் கடை உரிமையாளரிடம் ஒரு தங்க மோதிரம் மற்றும் மங்கள சூத்திரம் வேண்டுமென்று கூறினார். அதற்கு கடையின் உரிமையாளர் சுரேந்திர குமார் சோனி தயாரிக்கப்பட்ட நகைகள் இல்லை என்று மறுத்த நிலையில் அந்தப் பெண் தனக்கு கட்டாயம் வேண்டும் என்று வற்புறுத்தியதால், வேறு வாடிக்கையாளருக்காக செய்து வைத்திருந்த நகைகளை அந்த பெண்ணிடம் உரிமையாளர் சோனி எடுத்துக்காட்டினார்.

அதிலிருந்து அந்தப் பெண் 3 நகைகளை தேர்வு செய்த பின் ஆன்லைனில் பணம் செலுத்துவதாக கூறி முதலில் ஒரு ரூபாயை செலுத்தினார். அதற்கான குறுஞ்செய்தி வந்ததும், NEFT மூலம் மொத்த தொகையையும் அனுப்பியதாக கூறிவிட்டு ஒரு போலி ஸ்கிரீன் ஷாட் காட்டினார். அதன் பின் அந்தப் பெண்மணி நகைகளை எடுத்துக்கொண்டு அங்கிருந்து சென்று விட்டார். இதைத்தொடர்ந்து கடையின் உரிமையாளர் ஒரு நாள் கழித்து பரிவர்த்தனை நடைபெறவில்லை என்பதை வங்கிக்கு சென்று உறுதிப்படுத்திய நிலையில், உடனடியாக காவல் நிலையத்தில் புகார் கொடுத்தார்.

அந்த புகாரின் படி வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் சிசிடிவி காட்சிகள் மூலம் அந்தப் பெண் மற்றும் அவருக்கு உதவியாக இருந்த இருவரை தேடி வந்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வங்கிக்கு சென்று விசாரித்த போது இதற்கு முன்னாலும் இதே வங்கிக் கணக்கில் இது போன்ற சம்பவங்கள் நடந்துள்ளது என்று வங்கி அதிகாரிகள் தெரிவித்தனர். அந்த சமயத்தில்  நகையை திருடி சென்ற அந்தப் பெண் கடையின் உரிமையாளர் சோனிக்கு “வழக்கை தொடர வேண்டாம்” என்று மிரட்டல் விடுத்துள்ளார். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.