டெல்லியின் புராரி பகுதியில் நேற்று பிற்பகல் 2.30 மணியளவில், 16 வயது சிறுவன் ஒருவர் கத்தியால் பல முறை குத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில், பிங்கி காலனியில் பாதிக்கப்பட்ட சிறுவன் தனது நண்பருடன் வீட்டிற்கு நடந்து சென்ற போது, குற்றவாளிகள் அவரை காந்தி சவுக்கில் வழிமறித்து கத்தியால் குத்தினர். இச்சம்பவம் முழுவதும் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. கொலை செய்யப்பட்ட சிறுவன் முகுந்த்பூர் ஜந்தவிஹாரைச் சேர்ந்தவர் என அடையாளம் காணப்பட்டுள்ளது.

காயமடைந்த சிறுவன் கெஞ்சியபோதும், அந்த வழியாக சென்ற பொதுமக்கள் யாரும் தலையிடாமல் புறக்கணித்துவிட்டனர். பின்னர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுவனுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. டெல்லி போலீசார் இந்த சம்பவம் குறித்து முதலில் “கொலை முயற்சி” என வழக்குப் பதிவு செய்திருந்தனர்.

பின்னர் சிறுவன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, வழக்கு “கொலை” என்ற பிரிவிற்கு மாற்றப்பட்டுள்ளது. குற்றவாளிகள் சிறார்களா அல்லது பெரியவர்களா என்பதை உறுதிப்படுத்தும் வகையில் போலீசார் தீவிர விசாரணையில் இறங்கியுள்ளனர்.