ஜம்மு காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் ஏப்ரல் 22 அன்று நடந்த பயங்கரவாத தாக்குதலில் 26 பேரின் கொலையைத் தொடர்ந்து, பாகிஸ்தானில் இருந்து செயல்படும் பயங்கரவாத அமைப்புகளின் மீது இந்தியா “ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் மே 7 முதல் பதிலடி நடவடிக்கையை தொடங்கியது.

நான்கு நாட்கள் தீவிர சண்டை நடந்த நிலையில், மே 10 அன்று இரு நாடுகளும் இராணுவ நடவடிக்கைகளை நிறுத்தியது. இது தொடர்பாக வெளியுறவு அமைச்சர் எஸ். ஜெய்சங்கர் நெதர்லாந்து ஒளிபரப்பாளர் NOS-க்கு அளித்த பேட்டியில், “பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் இருந்தால், அவர்கள் இருக்கும் இடத்திலேயே இந்தியா தாக்கும்,” என இந்தியாவின் புதிய பாதுகாப்பு கோட்பாட்டை வெளிப்படையாகக் கூறினார்.

இந்த தாக்குதல்களுக்கு அமெரிக்கா அல்லது பிற நாடுகள் நடத்திய மத்தியஸ்தம் காரணமல்ல என்று ஜெய்சங்கர் உறுதியாக தெரிவித்தார். “பாகிஸ்தான் தங்களுடைய இராணுவம் வழியாகவே இந்தியாவிடம் போர் நிறுத்த முன்மொழிவைத் தெரிவித்தது, அதனை இந்தியா ஏற்றது” எனவும், “துப்பாக்கிச் சூடு நடக்காமல் இருப்பது பாகிஸ்தான் இராணுவம் ஒப்புக்கொண்ட முடிவு” எனவும் கூறினார்.

மேலும், இந்த பயங்கரவாத தாக்குதல் மத முரண்பாடு உருவாக்கும் நோக்கத்தோடு திட்டமிடப்பட்டதாகவும், தாக்குதலுக்கு முன்பே பாக் ராணுவத் தலைவர் அசிம் முனீர் கூறிய கருத்துகள் இது தொடர்புடையதென்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானை தளமாகக் கொண்ட லஷ்கர் இ தொய்பாவுடன் தொடர்புடைய “தி ரெசிஸ்டன்ஸ் ஃப்ரண்ட்” அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியது என இந்தியா உறுதி செய்துள்ளதாகவும், பதிலடி இல்லாமல் இருப்பது “சாத்தியமற்றது” என்பதால் ஆபரேஷன் சிந்தூர் தொடங்கியதாகவும் ஜெய்சங்கர் கூறினார்.

“பாகிஸ்தானுடனான பேச்சுவார்த்தை என்பது காஷ்மீர் இந்தியாவின் பகுதியாக இருப்பதால் சாத்தியமற்றது. பேச்சுவார்த்தை என்றால் அது பயங்கரவாதத்தை முடிக்கவும், பாக் ஆக்கிரமிப்பு பகுதிகளை திரும்பப் பெறவும் மட்டுமே இருக்கும்,” எனவும் அவர் தெளிவுபடுத்தினார். இந்தியாவின் பாதுகாப்பு மற்றும் பொருளாதார வளர்ச்சி இரண்டும் இணைந்த நோக்குடன் நகர்வதை அவர் வலியுறுத்தினார்.