
தமிழக வெற்றி கழகம் என்ற புதிய அரசியல் கட்சியினை நடிகர் விஜய் தொடங்கிய நிலையில் அடுத்து வரும் 2026 சட்டசபை தேர்தலில் போட்டியிடுகிறார். அவர் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி வைக்கும் கட்சிகளுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று அறிவித்துள்ள நிலையில் தற்போது கூட்டணி தொடர்பான பேச்சுவார்த்தைகளும் தொடங்கப்பட்டதாக கூறப்படுகிறது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த தமிழக வெற்றிக்கழகத்தின் தேர்தல் பிரச்சார பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜுனா கூட்டணி குறித்து பேசினார். அவர் பேசியதாவது, உச்சநீதிமன்றத்தில் வக்பு சட்டத்திற்கு எதிராக தமிழக வெற்றி கழகம் சார்பில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கில் கேரள அரசு எப்படி தன்னை இணைத்துக் கொண்டதோ அதேபோன்று தமிழக அரசும் தன்னை இணைத்துக் கொள்ள வேண்டும். இந்த வழக்கில் அனைத்து கட்சிகளும் ஒன்று சேர்ந்து போராடினால் கண்டிப்பாக வெற்றி கிடைக்கும்.
அரசியல் எதிரி திமுக மற்றும் கொள்கை எதிரி பாஜக ஆகிய கட்சிகளுடன் ஒருபோதும் தமிழக வெற்றிக்கழகம் கூட்டணி அமைக்காது. பாஜகவுடன் இருப்பதால் கண்டிப்பாக அதிமுகவுடனும் கூட்டணி கிடையாது. நாங்கள் விஜய் நிலைப்பாட்டை தான் பொதுவெளியில் தெரிவிக்கிறோம்.
எதிர்க்கட்சியான அதிமுகவை எதிர்க்க வேண்டிய அவசியம் இல்லை. அதிமுக ஆட்சியில் இல்லாத நிலையில் பல தேர்தல்களில் தோல்வியை சந்தித்த கட்சியுடன் நாங்கள் ஏன் கூட்டணி வைக்க வேண்டும் என்றார். மேலும் தமிழக வெற்றிக்கழகம் மூன்று கட்சிகளுடனும் கூட்டணி வைக்காது என்பதை தெளிவாக கூறியுள்ளார்.