உத்தரபிரதேச மாநிலம் ஆக்ரா நகரத்தில் உள்ள தாஜ்கஞ்ச் பகுதியில், கடந்த மே 18ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) மதுபோதையில் கார் ஓட்டிச் சென்ற ஒருவர் கட்டுப்பாட்டை இழந்து, வீட்டின் வெளியே நின்றிருந்த இளைஞர் ஒருவரை மோதியதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்தக் கொடூர சம்பவம் அருகில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவு செய்யப்பட்டுள்ளதுடன், தற்போது அந்தக் காட்சி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகின்றது.

அந்த வீடியோவில், வேகமாக வந்த கார், வீதியில் திடீரென கட்டுப்பாட்டை இழந்து, நேராக இளைஞர் மீது மோதுவது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் அந்தப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்வையும் பயத்தையும் ஏற்படுத்தியுள்ளது. ஆக்ரா காவல் துறை துணை கமிஷனர் தனது X  கணக்கில் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தி, ” உயிரிழந்த இளைஞரின் உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது என்று தெரிவித்துள்ளார். அதோடு இந்த சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடைபெறுகிறது என்றும் கூறியுள்ளார். அதோடு சட்டப்படி தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன” என தெரிவித்துள்ளார். காரை ஓட்டிய நபர் தற்போது காவல்துறையால் கைது செய்யப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில் பலரும் குற்றவாளிக்கு கடும் தண்டனை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.