
நீலகிரி மாவட்டம் நிலக்கோட்டை வீரப்பன் காலனி பகுதியை சேர்ந்தவர் முகமது. இவர் தனியார் பள்ளியில் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி மைமூனா. கடந்த 16-ஆம் தேதி முகமது வேலைக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்த போது மைமூனா தலை மற்றும் முகத்தில் படுகாயங்களுடன் இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் திடுக்கிடும் தகவல் தெரியவந்தது. அதாவது மைமூனாவின் மகன் சர்புதீன் வெளிநாட்டில் இருக்கிறார். அவரது மனைவியான கைருன்னிஷா, அவரது தங்கை ஆசினா இருவரும் சேர்ந்து மைனாவை கொலை செய்தது தெரியவந்தது.
ஆசினாவின் கணவர் போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டார். அவரை ஜாமீனில் எடுக்க பணம் இல்லாததால் வெளிநாட்டில் வேலை பார்க்கும் சர்புதீனுக்கு தெரியாமல் கைருன்னிஷாவும், ஆசினாவும் மைமுனாவின் வீட்டிற்கு சென்றுள்ளனர்.
அங்கு வைத்து டீ போட்டு கொடுத்த மைமூனாவின் கழுத்தை இறுக்கி, தலையில் குக்கர் மூடியால் பலமுறை ஓங்கி அடித்துள்ளனர். பின்னர் அவரது காதை கிழித்து, கழுத்தில் அணிந்திருந்த 6 பவுன் தங்க நகைகளை திருடிவிட்டு சமையல் கேஸ் சிலிண்டரை திறந்து விட்டு முன் பக்க கதவையும் பூட்டி சென்றது தெரியவந்தது. இதனால் இருவரையும் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.