தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாக கோடை மழை பெய்து வருகிறது. பல்வேறு இடங்களில் மழை பெய்து வருவதால் அக்னி நட்சத்திரத்தின் தாக்கம் என்பது குறைகிறது. இது மக்கள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய நிலையில் நேற்று வேலூர் உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்தது. அந்த வகையில் இன்றும் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளது.

வருகிற 21ஆம் தேதி மத்திய கிழக்கு அரபிக்கடலில் ஒரு புதிய வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும் எனவும், மே 22ஆம் தேதி அதே பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் இன்று மணிக்கு 40 முதல் 50 கிலோமீட்டர் சூறாவளி காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழைக்கு வாய்ப்புள்ளது. குறிப்பாக தர்மபுரி, கிருஷ்ணகிரி, ஈரோடு, திண்டுக்கல், தேனி, திருப்பூர், கோயம்புத்தூர் மற்றும் நீலகிரி ஆகிய 8 மாவட்டங்களில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளது.

தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் மே 22 ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொருத்தவரையில் வானம் மேகம் மூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதிகபட்ச வெப்பநிலை 35 டிகிரி செல்சியஸ் ஆகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 28 டிகிரி செல்சியஸ் ஆகவும் இருக்கக்கூடும். மேலும் தமிழக கடலோரப் பகுதிகள், வங்கக்கடல் மற்றும் அரபிக்கடல் ஆகிய பகுதிகளில் சூறாவளி காற்று வீசக்கூடும என்பதால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.