
உலகளவில் விமான விபத்துகள் பெரும்பாலான உயிரிழப்புகளுக்கு காரணமாக இருப்பது வழக்கமாக இருக்க, ஜெர்மனியில் இருந்து புறப்பட்ட லுஃப்தான்சா விமானம் விமானி இல்லாமல் 10 நிமிடங்கள் பறந்த அதிர்ச்சிக்குரிய சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி 17ம் தேதி, ஜெர்மனியின் பிராங்பெர்ட்டிலிருந்து ஸ்பெயினின் செவில்லுக்குச் சென்ற ஏர்பஸ் A321 விமானம், 199 பயணிகளும் 6 பணியாளர்களும் கொண்டிருந்த நேரத்தில் இந்த நிகழ்வு நடந்துள்ளது.
சம்பவம் நடைபெறும் நேரத்தில், முதன்மை விமானி கழிவறைக்கு சென்றிருந்தார். அந்தவேளையில் விமானத்தைக் கையாளும் துணை விமானி திடீரென மயங்கி விழுந்துள்ளார். உடனே விமானியின் கேபினில் அவசர எச்சரிக்கை ஒலித்தது.
அதிர்ஷ்டவசமாக, விமானம் autopilot முறை செயல்பாட்டில் இருந்ததால், எந்தவித தடையுமின்றி சீராக 10 நிமிடங்கள் பறந்தது. பின்னர், கழிவறையிலிருந்து வந்த முதன்மை விமானி, கேபினுக்குள் வந்து விமானத்தை இயக்கினார். விமானியின் அனுமதியுடன், விமானம் ஸ்பெயினின் மாட்ரிட் விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறக்கப்பட்டது.
தரையிறங்கியவுடன் முன்கூட்டியே தகவலுக்கு ஏற்ப தயாராக இருந்த மருத்துவ குழுவினர், மயங்கி கிடந்த துணை விமானியை உடனடியாக சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர். இது தொடர்பாக லுஃப்தான்சா நிறுவனம் விசாரணை நடத்தி வருகிறது.
மேலும், இந்த சம்பவம் எதிர்காலத்தில் நடக்காமல் இருக்க விமானக்குழுவினரின் உடல்நல பரிசோதனை, அவசரநிலை செயல்முறைகள் குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்படுவதாக நிறுவனத்தினர் தெரிவித்துள்ளனர்.