
அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் நிர்வாகம், ‘தி ஒன் பிக் பியூட்டிபூல் பில்’ என்ற புதிய மசோதாவை உருவாக்கியுள்ளது. இந்த மசோதையின் படி, அமெரிக்காவில் உள்ள வெளிநாட்டவர்கள் தங்கள் சொந்த நாடுகளுக்கு பணம் அனுப்பும் போது 5 சதவீத வரி விதிக்கப்படும்.
இதனால் அமெரிக்காவில் சட்டபூர்வமாக வசிக்கும் சுமார் 4.78 கோடி வெளிநாட்டியர், குறிப்பாக 45 லட்சம் இந்தியர்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த 3.45 லட்சம் பேர், ஆந்திரா மற்றும் தெலங்கானாவிலிருந்து வந்த 12.3 லட்சம் பேர் உள்ளிட்ட தென்னிந்தியர்கள் பெரும்பான்மையாக உள்ளனர்.
இந்த மசோதா ஜூலை 2025 முதல் அமலுக்கு வரக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன் மூலம், இந்தியாவில் உள்ள குடும்பங்களுக்கு மாதந்தோறும் பணம் அனுப்பும் இந்தியர்கள், ₹1 லட்சம் அனுப்பினால் ₹5,000 வரியாக கட்ட வேண்டிய நிலை ஏற்படும்.
இந்திய பங்கு சந்தை மற்றும் மியூச்சுவல் பண்டுகளில் முதலீடு செய்தாலும் இந்த வரி செலுத்த வேண்டியதாக மசோதாவில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதனால், சிலர் கிரிப்டோகரன்சி போன்ற சட்டவிரோத வழிகளை பயன்படுத்தும் அபாயமும் ஏற்பட்டுள்ளது.
2023-24 ஆண்டில் வெளிநாடுகளில் உள்ள இந்தியர்கள் மொத்தமாக $118.7 பில்லியன் டாலரை இந்தியாவுக்கு அனுப்பியுள்ளனர். புதிய வரி அமலுக்கு வந்தால், இந்தியர்கள் மட்டும் $1.6 பில்லியன் டாலர் அளவுக்கு இழப்பு சந்திக்க நேரிடும் என நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
மெக்ஸிகோ அதிபர் கிளாடியா ஷீன்பாம், இந்த நடவடிக்கையை கண்டித்து, “அமெரிக்க சட்டப்படி பல வரிகளை ஏற்கும் மெக்ஸிகோ மக்களுக்கு மீண்டும் ஒரு புதிய வரி விதிக்கப்படுவது பொருளாதார நெருக்கடியை ஏற்படுத்தும்,” என கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.