உலகம் முழுவதும் உணவுப் பாதுகாப்பின்மை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு தொடர்ந்து மோசமாகி வருவதாக ஐக்கிய நாடுகள் சபையின் உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு (FAO) மற்றும் அதன் கூட்டாளிகள் வெளியிட்டுள்ள புதிய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

2024ஆம் ஆண்டில் மட்டும் 53 நாடுகளில் சுமார் 295 மில்லியன் மக்கள் கடுமையான பசியால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இது 2023ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது 13.7 மில்லியன் உயர்வு எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இது உலகின் மிகவும் பலவீனமான பகுதிகளில் ஆறாவது ஆண்டாக தொடர்ந்து பசி அதிகரித்து வருவதை எச்சரிக்கிறது.

இந்த அறிக்கையை, உணவு நெருக்கடிகளுக்கு எதிரான உலகளாவிய வலையமைப்பு (GNAFC) வெளியிட்டது. இதில் FAO, உலக உணவுத் திட்டம் (WFP), அரசு மற்றும் அரசு சாரா அமைப்புகள் கலந்து கொண்டுள்ளன. ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ், இந்த நிலைமை குறித்து “பசி உலகளாவிய அளவில் எங்கள் நடவடிக்கைகளைவிட வேகமாக பரவி வருகிறது.

ஆனால் உற்பத்தி செய்யப்படும் உணவில் மூன்றில் ஒரு பங்கு வீணடிக்கப்படுகிறது” என குற்றச்சாட்டு எழுப்பினார். மேலும், உதவித்தொகை கடுமையாக குறைந்ததாலேயே இந்த நிலைமை மோசமடைந்துள்ளதாகவும் கூறினார்.

இந்த நிலையை ஏற்படுத்திய முக்கிய காரணிகள், வறுமை, பொருளாதார அதிர்ச்சிகள், தீவிர வானிலை மாற்றங்கள், மற்றும் பெரும்பாலும் உள்நாட்டுப் போர்கள் மற்றும் மோதல்களே என அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. குறிப்பாக சூடான், தெற்கு சூடான், ஹைட்டி, மாலி மற்றும் காசா பகுதிகளில் பேரழிவு நிலை பதிவாகியுள்ளது.

வலுக்கட்டாய இடப்பெயர்ச்சி மற்றும் அகதிகள் நிலைமை மேலும் உணவுப் பாதுகாப்பின்மையை தீவிரமாக்கியுள்ளது. 2024ம் ஆண்டில் மட்டும் 128 மில்லியன் பேர் வலுக்கட்டாயமாக இடம்பெயர்ந்துள்ளதுடன், அவர்களில் 95 மில்லியன் பேர் ஏற்கனவே உணவுப் பற்றாக்குறை நிலவிய பகுதிகளில் வசிக்கின்றனர்.