ஐபிஎல் 2025 தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகளுக்கிடையிலான போட்டி மிகவும் பரபரப்பாக நடந்தது. இந்த சீசனில் ஆர்.சி.பி., சிஎஸ்.கே-வை இருமுறை வீழ்த்தியது. குறிப்பாக, 2008-க்குப் பிறகு முதல் முறையாக  சேப்பாக்கம் மைதானத்தில் RCB  வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது. சமீபத்தில் பெங்களூருவில் நடைபெற்ற போட்டிக்குப் பிறகு, ரசிகர்கள் மோதலில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இரு அணிகளிலும் ஆடிய முன்னாள் வீரர் ராபின் உத்தப்பா இந்த வன்முறையை கடுமையாக விமர்சித்துள்ளார்.

 

ஜாரட் கிம்பரின் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் ராபின் உத்தப்பா கூறும்போது, “மைதானத்திற்கு வெளியே சிஎஸ்கே ரசிகர்களை ஆர்.சி.பி ரசிகர்கள் கேலி செய்தனர். அவர்கள் டீம் பஸ் செல்லும்போது வெறுப்பான வார்த்தைகள் பேசினர். சில பெண்கள் அங்கே அவமதிக்கப்பட்டதை பார்த்ததும் மிகவும் மோசமாக உணர்ந்தேன்,” என தெரிவித்தார். மேலும், சில ரசிகர்கள் வெள்ளை சட்டையில் கருப்பு கோடுகள் வரைந்து ‘தலா’, ‘MS’ என்று எழுதி, சிஎஸ்கே-வின் தடைப்பட்ட ஆண்டுகளை jail-க்கு ஒப்பிட்டு நகையாடினர் என்றும் கூறினார்.

 

“இது விளையாட்டிற்கு அப்பால் போய்விட்டது. இப்போது ரசிகர்கள் ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொள்கிறார்கள். இது கவலையளிக்கிறது. விளையாட்டு என்பது மகிழ்ச்சிக்கானது, பகை வளர்க்க அல்ல. இது குழந்தைகள், குடும்பங்கள் பார்க்கும் ஒரு நிகழ்வு,” என்று ராபின் உத்தப்பா தெரிவித்தார். தற்போது சிஎஸ்கே அணியின் பிளேஆஃப் வாய்ப்பு நீங்கியுள்ள நிலையில், ஆர்சிபி அணிக்கு இன்று கேகேஆர் அணியுடன் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்றால் பிளேஆஃப் செல்ல வாய்ப்பு கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.