
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலுக்காக தற்போதே அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. இந்நிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் கடந்த இரண்டு நாட்களாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து ஆலோசனை நடத்தி வருகிறார். அந்த வகையில் நேற்று சத்தியமூர்த்தி பவனில் மாவட்ட நிர்வாகிகள் அல்லாமல் 11 மாவட்டங்களின் பொறுப்பாளர்கள், கவுன்சிலர்கள், கிராம கமிட்டி நிர்வாகிகள் மற்றும் கோவை மாவட்ட கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோரிடம் ஆலோசனை நடத்தினார்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் போது சில மாவட்ட பொறுப்பாளர்கள் நாம் பல வருடங்களாக திமுக கூட்டணியில் இருக்கும் நிலையில் அவர்கள் தான் பலம் அடைந்தவர்களாக மாறி வருகிறார்களே தவிர நமக்கு எந்த பலமும் கிடைக்கவில்லை. எனவே அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் குறைந்தது 40 சீட் கேட்க வேண்டும் என்று வலியுறுத்தியதாக தகவல் வெளிவந்துள்ளது.
அதேபோன்று ஆட்சி அதிகாரத்திலும் பங்கு வேண்டும் என்று கேட்க வேண்டும் என கூறியுள்ளனர். ஒருவேளை கூடுதல் சீட் மற்றும் ஆட்சி அதிகாரத்தில் பங்கு கிடைக்கவில்லை என்றால் நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் அவரிடம் நீங்கள் கூட்டணி தொடர்பாக பேச வேண்டும் என்று வலியுறுத்தியதாக கூறப்படுகிறது. மேலும் 2026 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் தமிழக வெற்றி கழகத்துடன் கூட்டணி அமைப்பவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு உண்டு என்று ஏற்கனவே நடிகர் விஜய் அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.