
பாகிஸ்தானுக்கு எதிரான பதிலடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்தியாவை விமர்சித்தது துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள். பஹல்காம் பகுதியில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ஏவுகணைகள் மூலம் 9 பயங்கரவாத முகாம்கள் மற்றும் 3 விமானப்படை தளங்களை அழித்தது. இந்த நடவடிக்கைக்கு எதிராக இந்த இரண்டு நாடுகளும் கண்டனம் தெரிவித்துள்ளன.
இதை தொடர்ந்து, இந்த நாடுகள் பாகிஸ்தானுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளன. சீனாவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாக இருந்தாலும், துருக்கி மற்றும் அஜர்பைஜானின் துடிப்பான கண்டனங்கள் இந்திய மக்களிடம் கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. துருக்கி மற்றும் அஜர்பைஜான் நாடுகள் சுற்றுலா துறையில் முக்கிய இடம் பெற்றுள்ளன.
இந்தியாவிலிருந்து ஆண்டுக்கு சுமார் 3 லட்சம் பேர் இந்த நாடுகளுக்கு சுற்றுலா செல்லும் நிலையில், தற்போது அந்த பயணங்களை ரத்து செய்ய சுற்றுலா நிறுவனங்களும் நடவடிக்கை எடுத்துள்ளன. மேலும், சமூக வலைதளங்களில் “#BoycottTurkey”, “#BoycottAzerbaijan” போன்ற ஹேஷ்டேக்குகள் டிரெண்டாகி வருகின்றன. இந்த நாடுகளின் நிலைப்பாட்டை இந்தியா கண்டித்து வருகிறது.
துருக்கியின் மீது ஆத்திரம் அதிகரித்த நிலையில், புனே ஏபிஎம்சி மார்க்கெட்டில் உள்ள ஆப்பிள் வியாபாரிகள் துருக்கியிடம் இருந்து ஆப்பிள்கள் வாங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளனர். வியாபாரி சுயோக ஜிண்டி தெரிவித்ததாவது, “துருக்கியில் நிலநடுக்கம் நேர்ந்தபோது முதலில் இந்தியா தான் உதவி செய்தது. ஆனால் இன்று அதே நாடு பாகிஸ்தானுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது.
அதனால் துருக்கி ஆப்பிள்களை வாங்குவதை புறக்கணிக்கிறோம். இந்தியாவில் ஹிமாச்சலப் பிரதேசம் போன்ற பகுதிகளிலிருந்து ஆப்பிள் வாங்கி விற்பனை செய்வோம்,” என்று கூறினார். புனே மார்க்கெட்டில் ரூ.1200 முதல் ரூ.1500 கோடிவரையிலான துருக்கி ஆப்பிள் விற்பனைக்கு வரும் நிலையில், இப்போது அதற்கு முழு தடையை வியாபாரிகள் அறிவித்துள்ளனர்.