தமிழகத்தில் மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ள நிலையில் புதுச்சேரி மற்றும் காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளிலும் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று அந்தமான் பகுதிகளில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி அந்தமான் கடல், அந்தமான் நிக்கோபார் தீவு, தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் இன்று தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது.

இன்று தமிழகத்தில் ஒரு சில இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் நாளை திருவண்ணாமலை, சேலம், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, ஈரோடு, திண்டுக்கல், திருப்பூர், கோவை மாவட்ட மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி ஆகிய 10 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் இன்று வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதோடு நகரின் ஒரு சில பகுதிகளில் மழைக்கு வாய்ப்புள்ளது. அதே நேரத்தில் வெப்பநிலையும் இன்று இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கேரளாவில் வருகிற 27ஆம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்குகிறது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கதாகும்.