
பாமக கட்சியின் சார்பில் நேற்று சித்திரை முழு நிலவு மாநாடு நடைபெற்ற நிலையில் இதனை காடுவெட்டி குருவின் மகள் விமர்சித்துள்ளார். இது தொடர்பாக அவர் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது, பாமக கட்சி 27 தியாகிகள் உயிர் நீத்ததால் வந்தது. இந்தக் கூட்டம் அவர்களுக்காகவும் என் தந்தைக்காகவும் வந்தது.
ஆனால் அவர்களை அங்கீகரித்து எந்த இடத்திலும் பேசவில்லை. நீங்கள் மக்களுக்கு நல்லது செய்வதாக இருந்தால் உயிர் நீத்த அந்த 27 தியாகிகளை நீங்கள் முன்னிலை படுத்திருக்க வேண்டும். ஆனால் முன் வரிசையில் உங்களுடைய மருமகள் மற்றும் குடும்பத்தினரை தான் அமர வைத்தீர்கள். பொதுமக்களுக்கு அந்த 27 தியாகிகளை மட்டுமே தெரியும் நிலையில் அவர்களின் குடும்பத்தினரை தெரியாது.
எனவே நீங்கள் தான் உயிர் நீத்த அந்த 27 தியாகிகளின் குடும்பத்தினரையும் அழைத்து முன்னிலைப்படுத்தி இருக்க வேண்டும். அறிமுகப்படுத்தி இருக்க வேண்டும். நீங்கள் எதையுமே செய்யாத நிலையில் என்னுடைய தந்தை மட்டும் உயிரோடு இருந்திருந்தால் கண்டிப்பாக இதை செய்திருப்பார். முன்னாள் முதல்வர் கலைஞர் கொடுத்த மூன்று லட்சம் பணத்தை இரட்டிப்பாக திருப்பிக் கொடுக்கிறேன் என்று கூறிவிட்டு நீங்கள் தரவில்லை.
நமக்கு கொடுத்த இட ஒதுக்கீட்டையும் நீங்கள் கொச்சைப்படுத்துகிறீர்கள். அதே சமயத்தில் அந்த தியாகிகளை சுட்டுக்கொன்ற எம்ஜிஆரின் அதிமுக கட்சி மற்றும் ஜெயலலிதாவை தூக்கி பேசுகிறீர்கள். மேலும் தற்போது விழுப்புரத்தில் 27 தியாகிகளுக்கு மணி மண்டபங்கள் கட்டிய நிலையில் இதன் திறப்பு விழாவின்போது முதல்வர் ஸ்டாலின் அவர்களின் குடும்பத்தினரை அழைத்து கௌரவப்படுத்தினார் என்று கூறினார்.