
திருநெல்வேலி மாவட்ட காவல்துறை சார்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்றில், ஜாதி சார்ந்த பிரச்சனைகள், கொலைகள், அதோடு தொடர்புடைய கொடூரமான சம்பவங்களை கட்டுப்படுத்தும் முயற்சியில் திருநெல்வேலியில் காவல்துறையினர் தீவிர நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.இதனால் சமீப காலங்களாக ஜாதி சார்ந்த குற்றங்கள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. மேலும் இளைஞர்கள், மாணவர்கள் சமூக வலைதளங்களில் ஒரு சமுதாயத்தினரை உயர்த்தும் விதமாக மற்றொரு சமுதாயத்தினரை தாழ்த்தி கூறும் விதமான பதிவுகளை பகிர்ந்து வருகின்றனர்.
இதனால் சமூகத்தில் ஜாதி உணர்வுகளை தூண்டும் அபாயம் உருவாகிறது. எனவே சமூக அமைதி நிலைநாட்டுவதற்காக இதுபோன்ற தகாத செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காணும் பணியில் திருநெல்வேலி காவல்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். குறிப்பாக தடை செய்யப்பட்ட ஆயுதங்களை காட்சிப்படுத்தும் புகைப்படங்கள், வீடியோக்கள் ஒரு சமுதாயத்தினரை விமர்சித்து வெளியிடப்படும் பதிவுகள் தொடர்பாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என தெரிவித்துள்ளனர்.
மேலும் இது போன்ற பதிவுகளை வெளியிடும் நபர்களை அடையாளம் கண்டறிந்து அவர்களது சமூக வலைதள கணக்குகள் வாட்ஸ் அப் குழுக்கள் ஆகியவற்றை தீவிரமாக ஆய்வு செய்யப்படுகின்றனர். அதில் சட்டத்திற்கு முரண்பான கருத்துக்கள் ஏதும் இருக்கும் பட்சத்தில் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி சிலம்பரசன் அறிவுறுத்தலின்படி, சமூக வலைதளங்களில் உருவாகும் ஜாதி சார்ந்த பிரச்சனைகளின் தீவிரம் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் குறித்து பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் மற்றும் கிராமப்புறங்களில் உள்ள பொதுமக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.
சமூக ஊடகங்களில் வெளியிடப்படும் சட்ட ஒழுங்கை பாதிக்கக்கூடிய வழக்குகளின் கீழ் கடந்த ஆண்டு 33 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 36 பேர் கைது செய்யப்பட்டிருந்தனர். இதை அடுத்து தற்போது 2025 ஆம் ஆண்டு இதுவரை 50 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 33 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இதனால் சமூக ஒற்றுமை மற்றும் பொது அமைதி நிலை நிறுத்தும் நோக்குடன் நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி கண்காணிப்பு மற்றும் உரிய சட்ட நடவடிக்கைகளை திருநெல்வேலி மாவட்ட காவல்துறை தொடர்ந்து மேற்கொண்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.