தமிழ் சினிமாவில் பிரபலமான காமெடி நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக திரையில் வலம் வருபவர் நடிகர் சூரி. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள “மாமன்” என்ற திரைப்படம் வரும் 16ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்த திரைப்படத்தினை இயக்குனர் பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கியுள்ளார். இந்தத் திரைப்படத்தில் நடிகை ஐஸ்வர்யா லட்சுமி, பாலா சரவணன், ராஜ்கிரண் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில் நடிகர் சூரி, நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க மாட்டேன் என்றும், கதாநாயகனாக மட்டுமே நடிக்கப் போவதாக கூறியுள்ளார். இது பற்றி அவர் பேசியதாவது, “இங்கு யாருடனும் எனக்கு போட்டி கிடையாது. ஒரு கட்டத்தை தாண்டி வந்து விட்டேன். மீண்டும் பழைய நிலைக்கு செல்வது கடினம். ஒருவேளை அப்படி நடித்தாலும் நல்ல கதாபாத்திரமாகவும் மக்கள் மத்தியில் உணர்வு பூர்வமான செய்தியை கொண்டு செல்லும் கதாபாத்திரமாகவும் இருக்க வேண்டும். என்னை தேடி வந்து நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடிக்க அழைக்கிறார்கள் என்று நான் இனிமேல் நடிக்க முடியாது. அவ்வாறு நடித்தால் என்னை கதாநாயகனாக படம் எடுக்கும் இயக்குனர்களுக்கு நான் என்ன பதில் சொல்லுவேன்? எனவே இனிமேல் கதாநாயகனாக மட்டுமே நடிப்பதில் உறுதியாக இருக்கிறேன் என்று கூறினார்.