திருப்பூர் மாவட்டம் அவினாசியைச் சேர்ந்த சுப்ரீத் (வயது 20) என்ற வாலிபர், கோபி கச்சேரிமேடு சீதாம்மாள் காலனியில் கடந்த ஆண்டு தனது தாய் மற்றும் மனைவி என கூறி ஒரு இளம்பெண்ணுடன் ஒரு வாடகை வீட்டில் குடியேறினார். சுப்ரீத் ஒரு ஆக்குபேஷனல் தெரபிஸ்ட் என கூறப்பட்டு வந்தார்.

சில மாதங்களுக்குப் பிறகு, அவரது தாய் அவினாசி சென்றுவிட்டதால், சுப்ரீத் மற்றும் 19 வயது இளம்பெண் மட்டும் வீட்டில் இருந்தனர். அந்த இளம்பெண் கோவையில் உள்ள தனியார் கல்லூரியில் படித்து வருவதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், அந்த இளம்பெணுக்கு சில நாட்களுக்கு முன் பிரசவ வலி ஏற்பட்டதாகவும், யாரும் இல்லாத சூழ்நிலையில் சுப்ரீத் யூடியூப் காணொளி பார்த்து வீட்டிலேயே பிரசவம் பார்த்ததாக தெரிகிறது.

மாணவிக்கு பெண் குழந்தை பிறந்த நிலையில், ரத்தப்போக்கு அதிகரித்ததால் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் அவசரமாக அனுமதிக்கப்பட்டார். தகவலறிந்த கோபி அரசு சுகாதார நிலையத்தின் மருத்துவர் மற்றும் செவிலியர்கள் மாணவியை சந்தித்து விசாரணை மேற்கொண்டனர்.

வீட்டில் நடைபெற்ற சோதனையின் போது, குழந்தையின் தொப்புள்கொடி ஒரு பிளாஸ்டிக் கவரில் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. மாணவியின் பெற்றோர் மொடச்சூரில் வசிக்கின்றனர். அவர்களுக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது.

இதனால் மருத்துவமனைக்கு வந்த பெற்றோர், குழந்தையுடன் இருப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளனர். சுப்ரீத் உண்மையில் மாணவியின் கணவரா என்பதை உறுதி செய்ய, மாணவியின் உடல்நிலை சரியான பிறகு விசாரணை மேற்கொள்ள சுகாதாரத் துறையினர் முடிவுசெய்துள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.