
கர்நாடக மாநிலத்தின் கடக் பகுதியில் அமைந்துள்ள ஹட்லகெரி என்ற சிறிய கிராமம், தனித்துவமான பாரம்பரியத்தால் அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறது. இந்தக் கிராமத்தில் இரண்டாவது மாடி கொண்ட வீடுகள் எதுவும் இல்லை. ஏனெனில், அந்த ஊரில் உள்ள சத்தியம்மா தேவி கோவில் உயரத்தில் எந்த வீடும் இருக்கக் கூடாது எனும் நம்பிக்கையை மக்கள் கடைபிடித்து வருகின்றனர். கோவிலை விட உயரமான கட்டிடங்கள் அமைத்தால், பேரழிவுகள் ஏற்படும் என்பதையே அவர்கள் பல நூற்றாண்டுகளாக நம்புகின்றனர்.
கிராமவாசிகள் கூறுவதைப் பார்க்கும்போது, கடந்த காலத்தில் ஒருவரே கோவிலை விட உயரமான இரண்டு மாடி வீடு கட்டியுள்ளார். ஆனால் பின்னர் அவரது குடும்பம் கடுமையான நிதி பிரச்சினைகளை சந்தித்து, அந்த வீட்டை விட்டு வெளியேற வேண்டிய நிலைக்கு சென்றனர். இதனைத் தொடர்ந்து, அந்தக் கிராமத்தில் எந்த வீடுகளும் கோவிலை விட உயரமாக கட்டப்படவில்லை. பணம், கல்வி, தொழில் என எந்த முன்னேற்றமும் அந்த நம்பிக்கையை மாற்ற முடியவில்லை என்பது இந்த கிராமத்தின் சிறப்பு.
இந்தக் கிராமத்தில் சத்தியம்மா தேவி கோவில் அருகில் உள்ள ஒரு வேப்ப மரம் கூட பக்தி உணர்வுடன் வழிபடப்படுகிறது. அந்த மரத்தில் தேவியின் சக்தி இருப்பதாக நம்பப்படுவதால், வேப்ப மரம் வெட்டப்படுவதில்லை. தினமும் மக்கள் அந்த மரத்திற்கு பூஜை செய்கிறார்கள். வேப்ப மரத்தை விறகாகக் கூட பயன்படுத்துவதில்லை என்பதுடன், மரத்தை சுற்றி சுத்தம் செய்து, பூஜைகள் செய்வதும் வழக்கம்.
இன்றைய நவீன உலகத்தில் பலர் பழமையான நம்பிக்கைகளை மறந்து விட்டாலும், ஹட்லகெரி கிராம மக்கள் இன்றும் மரபுகளை மரியாதையுடன் தொடர்கிறார்கள். சத்யம்மா, சத்யப்பா, சத்யவ்வா போன்ற பெயர்கள் தொடர்ந்து இங்கு பிறக்கும் குழந்தைகளுக்கு வைக்கப்படுகின்றன. இது அந்தக் கோவிலின் பெருமை மட்டுமல்ல, அந்த மக்களின் ஆன்மிக உணர்வுக்கும், ஒற்றுமைக்கும் சான்றாக இருக்கிறது.