இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் தாக்குதலுக்குப் பிறகு, நாடு முழுவதும் விமானப் பயணங்களில் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வியாழக்கிழமை மட்டும் 430 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது நாட்டின் மொத்த விமானப் பயணத்தின் சுமார் 3 சதவீதத்தை குறிக்கிறது.

பாகிஸ்தான் மற்றும் இந்தியாவின் மேற்குப் பகுதிகளில் நிலவும் போர் பதற்றத்தினால், காஷ்மீர் முதல் குஜராத் வரை விமானங்கள் வழிமாற்றம் செய்யபட்டன அல்லது ரத்து செய்யப்பட்டன.

பஹல்காம் தாக்குதலுக்குப் பதிலடி அளிக்கும் வகையில் இந்திய ராணுவம் மே 7 அன்று பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள ஜெய்ஷ்-இ-முகமது மற்றும் லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத முகாம்கள் மீது ஏவுகணைத் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, 27 விமான நிலையங்கள் வணிக விமானங்களுக்கு மூடப்பட்டுள்ளன. ஸ்ரீநகர், லே, ஜம்மு, அமிர்தசரஸ், பதான்கோட், சண்டிகர், ஜோத்பூர், ஜெய்சால்மர் ஆகியவை இதில் அடங்கும். இந்த விமான நிலையங்கள் மே 10 வரை செயல்பாடுகளை நிறுத்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏர் இந்தியா, இண்டிகோ, ஸ்பைஸ்ஜெட் உள்ளிட்ட முக்கிய இந்திய விமான நிறுவனங்கள் தங்களது பல்வேறு உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களை தற்காலிகமாக ரத்து செய்துள்ளன. ஏர் இந்தியா மட்டும் 140 விமானங்களை, இண்டிகோ 165 விமானங்களை ரத்து செய்ததாக அறிவித்துள்ளன.

பாகிஸ்தான் வான்வெளி வழியாகச் செல்லும் விமானங்கள் மாற்றுப்பாதைகள் மூலம் இயக்கப்படுவதால், அதிகமான தாமதங்களும் பயண இடையூறுகளும் ஏற்பட்டுள்ளதாக பயணிகள் புகார் தெரிவிக்கின்றனர். பாதுகாப்பு சூழ்நிலை காரணமாக மேலும் பல விமானங்கள் ரத்து செய்யப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.