திண்டுக்கல் மாவட்டம் பழைய வத்தலகுண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ். இவர் அரசு பேருந்தில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார். அதே பகுதியில் தனபால் என்பவர் வசித்து வருகிறார். இந்த நிலையில் செல்வராஜ் தனபாலின் மனைவிக்கு திண்டுக்கல் உள்ள அரசு கல்லூரியில் வேலை வாங்கி தருவதாக கூறியுள்ளார்.

இதனை நம்பிய தனபாலை செல்வராஜ் திண்டுக்கல்லில் உள்ள கல்லூரி பேராசிரியை சியாமளாதேவியிடம் அழைத்து சென்றுள்ளார். அப்போது லேப் டெக்னீசியன் பணிக்கு 5 லட்ச ரூபாய், கிளர்க் அலுவலக உதவியாளர் பணிக்கு 3 லட்ச ரூபாய் வழங்க வேண்டும் என சியாமளா தேவி கூறியுள்ளார்.

இதனை நம்பி தனபால் கடந்த 2023- ஆம் ஆண்டு அந்த பணத்தை கொடுத்து விட்டார். இதே போல நந்தினி, மாலினி, ரேவதி, ராஜேஸ்வரி  உள்ளிட்ட 7 பேர் கல்லூரி பணிக்காக 28 லட்ச ரூபாய் பணத்தை முன்பணமாக சியாமளா தேவியிடம் கொடுத்துள்ளனர்.

ஆனால் கூறிய படி அவர் வேலை வாங்கி கொடுக்கவில்லை. பணத்தையும் திரும்ப தரவில்லை. மேலும் நியாயம் கேட்க ராஜேஸ்வரியை சியாமளா தேவி தாக்கியதாக தெரிகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் சியாமளா தேவியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.