
உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில், ஒரு திருமண நிகழ்வில் ஏற்பட்ட பரபரப்பான சம்பவம் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது. ரக்ஸா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட டெலி கிராமத்தில் சன்னி என்ற இளைஞரின் திருமணம் நடைபெற்றுக்கொண்டிருந்த போது, அவரது முன்னாள் காதலி தன்னுடைய குடும்பத்தினருடன் திருமண மண்டபத்துக்கே வந்து, திருமணத்தை நிறுத்துமாறு கூறியுள்ளார்.
அவர் சன்னியுடன் கடந்த 10 ஆண்டுகளாக உறவு வைத்திருந்ததாக கூறி, “இவர் வேறு யாரையும் திருமணம் செய்தால், நான் உயிரோடு இருக்க மாட்டேன் என்று கூச்சலிட்டு பரபரப்பை ஏற்படுத்தினார்.
இந்த நிகழ்வால் திருமணத்தில் வந்த விருந்தினர்கள் குழப்பமடைந்தனர். மணமகனின் குடும்பத்தினர், அந்தப் பெண்ணின் செயலுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். ஆனால், காதலி மற்றும் அவரது உறவினர்கள் மிகவும் உறுதியுடன் இருந்ததால் தகராறு ஏற்பட்டது.
பிறகு, அந்தப் பெண், மணமகனாக இருந்த சன்னியை தரதரவென இழுத்து, நேரடியாக காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றார். அங்கு வைத்து பல மணி நேரம் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
காவல் நிலையத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் பின்னர், சன்னியின் குடும்பத்தினர் அந்த பெண்ணை திருமணம் செய்து வைக்க ஒப்புக்கொண்டனர். பின்னர் சன்னியும் அவரது காதலியும் டாடியா கிராமத்திற்கு திரும்பிச் சென்று, திருமண ஏற்பாடுகளை செய்தனர்.