
உத்தரப்பிரதேச மாநிலம் ஜௌன்பூர் மாவட்டத்தில் உள்ள ஷாகஞ்ச் ஜங்ஷன் ரயில்வே நிலையத்தில் பிளாட்பார்ம் எண் 5ல் தூங்கிக்கொண்டிருந்த குடும்பத்திடம் இருந்து, சுக்ரீவ் எனும் திருடன் ஒரு ஒன்றரை வயது பெண் குழந்தையை தூக்கிச் செல்ல முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
குழந்தையின் தாயார் அவரை கண்டதும் அலறியதால், அருகில் இருந்த பயணிகள் மற்றும் ரயில்வே போலீசார் அந்த நபரை துரத்தினர். தப்பிக்க முடியாமல் போன திருடன் அருகிலுள்ள குளத்தில் ஒளிந்ததோடு, குழந்தையையும் அதே குளத்தில் வீசிவிட்டார். குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோது, மூழ்கியதன் காரணமாக உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டது.
பிச்சை எடுத்து குடும்பத்தை நடத்தும் காரியா லோனா எனும் நபர், அசாம்கர் மாவட்டத்திலிருந்து குடும்பத்துடன் ஷாகஞ்ச் வந்து பிளாட்பாரத்தில் தூங்கியிருந்தார். GRP காவல் கண்காணிப்பாளர் குன்வர் பிரதாப் சிங் தலைமையில் போலீசார் சம்பவ இடத்தை சென்று ஆய்வு செய்துள்ளனர். திருடனை கைது செய்துள்ள போலீசார், அவருக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இந்த சம்பவம் சமூகத்தில் பெரும் அதிர்வலை ஏற்படுத்தியுள்ளது.