
திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூர் பகுதியில் நிகழ்ந்த கொடூரமான சம்பவம் பகுதியிலுள்ள மக்களிடம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 75 வயதான ஓய்வுபெற்ற கிராம நிர்வாக அதிகாரி மாரியப்பன், தனது தோட்டத்தில் மனைவி பத்மினியுடன் வசித்து வந்தார்.
விவசாயம் மற்றும் வட்டிக்கடன் தொழில் செய்து வந்த அவர், கடந்த இரண்டு ஆண்டுகளாக புலங்கட்டி நாயக்கனூரைச் சேர்ந்த 16 வயது சிறுவனை வேலைக்குப் பார்த்துக்கொண்டு வந்தார். சிறுவனுக்கு உணவும், உறைவிட வசதியும் வழங்கியிருந்தார்.
இந்த நிலையில் கடந்த 11ம் தேதி மாரியப்பன் திடீரென உயிரிழந்தார். வயது மூப்பே காரணமாக இருக்கலாம் என நினைத்த குடும்பத்தினர் உடலை அருகிலுள்ள மயானத்தில் அடக்கம் செய்தனர்.
இதையடுத்து அவரது மகன் பன்னீர்செல்வம் வீட்டில் பார்த்தபோது, 6 1/2 பவுன் தங்க நகைகள் மற்றும் வட்டிக்கடனுக்கான ஆவணங்கள் காணாமல் போனதை கவனித்தார். உடனடியாக சந்தேகம் எழுந்த பன்னீர்செல்வம், வீட்டில் வேலை பார்த்த சிறுவனை சந்தித்து விசாரித்தபோது, பதில்களில் முரண்கள் இருந்ததால் வேடசந்தூர் போலீசில் புகார் செய்தார்.
புகாரின்பேரில் போலீசார் அந்த சிறுவனை கைது செய்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், சிறுவன் தென்னை மரத்திற்கு வைக்கும் பூச்சி மாத்திரைகளை குளிர்பானத்தில் கலந்து கொடுத்து மாரியப்பனை கொன்றதாக ஒப்புக்கொண்டான்.
மேலும், கடந்த மாதம் மாரியப்பன் வீட்டில் வைத்திருந்த 6 1/2 பவுன் தங்க நகைகளை திருடி, ஒரு தனியார் வங்கியில் அடகு வைத்து ரூ.2.5 லட்சம் பெற்றதையும், அதனை வட்டிக்கு கொடுத்து வசூல் செய்து வந்ததையும் கூறினான்.
மாரியப்பன், நகைகள் பற்றிய சந்தேகத்தில் சிறுவனை நேரில் சந்தித்து கேட்டபோது, தன் மீது போலீசில் புகார் செய்யப்போவதாக பயந்த சிறுவன், இந்த கொடூரத்தினை நிகழ்த்தியதாகக் கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியிருக்கின்றான்.
இதையடுத்து போலீசார், மாரியப்பனின் உடலை மீண்டும் தோண்டி பிரேத பரிசோதனை செய்தனர். சிறுவனை கைது செய்து சிறுவர் சீர்திருத்தப் பள்ளியில் அடைத்துள்ளார்கள். ஒரு பழைய அதிகாரியின் உயிரை, சில பவுன் நகைகளுக்காக பறித்த இந்த சம்பவம், அந்த பகுதியை பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ளது.