இந்தியாவின் முன்னணி தகவல் தொழில்நுட்ப நிறுவமான இன்போசிஸ், தங்களது உள் மதிப்பீடுகளில் தோல்வியடைந்ததால் 240 பயிற்சி நிலை பணியாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது.

ஏப்ரல் 18-ஆம் தேதி அனுப்பப்பட்ட மெயில்களில் இந்தத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னரும், இந்நிறுவனம் பிப்ரவரி மாதம் 300-க்கும் மேற்பட்ட பயிற்சியாளர்களை இதே காரணத்துக்காக நீக்கியிருந்தது.

பயிற்சியின் இறுதி மதிப்பீட்டில் மூன்று வாய்ப்புகளும் வழங்கப்பட்ட நிலையில், அவர்கள் குறைந்த தகுதி தரங்களை பெற முடியாததால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

பணிநீக்கப்பட்ட பணியாளர்களுக்கு இன்போசிஸ் தரப்பில் NIIT மற்றும் UpGrad நிறுவனங்களின் மூலமாக இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும். மேலும், அவர்கள் வேறு நிறுவனங்களில் வேலை வாய்ப்புகளைத் தேடும் போது, ‘Professional Outplacement Services’ எனப்படும் தொழில்முறை வேலைவாய்ப்பு வழிகாட்டல் சேவைகள் வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல, Infosys BPM லிமிடெட்டில் உள்ள வேலை வாய்ப்புகளுக்குத் தயார் செய்யும் பயிற்சியும் வழங்கப்படுவதாக இமெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்நிலையில் பணிநீக்கம் செய்யப்பட்ட பயிற்சி நிலை ஊழியர்களுக்கு ஒரு மாத ஊதியத்துடன் கூட accommodation மற்றும் மைசூரிலுள்ள பயிற்சி மையத்திலிருந்து பெங்களூரு அல்லது சொந்த ஊருக்கான பயண செலவும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த சில காலங்களாக தளர்ந்த சந்தை நிலவரத்தில் செயல்பட்டு வரும் இன்போசிஸ் நிறுவனம், இந்த நெருக்கடியை எதிர்கொண்டு வருவதாகவும், தற்போதைய நிதியாண்டில் வெறும் 0% முதல் 3% வரையிலான வளர்ச்சி மட்டுமே எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளது.