ஹிமாச்சல பிரதேசத்தில் நடைபெற்ற ஹோளி பார்டி விவகாரம் தற்போது அதிகார துறையையும், அரசியலையும் கலக்கியுள்ளது. ஓய்வு பெறும் நாளில் 6 மாதம் நீட்டிக்கப்பட்ட IAS அதிகாரி சக்ஸேனா, மார்ச் 14ஆம் தேதி ஹிமாச்சல் சுற்றுலா கழகத்தின் ஹோட்டல் ஹாலிடே ஹோம்-ல் ஹோளி நிகழ்ச்சி ஒன்றை ஏற்பாடு செய்தார்.

இதில் 75 பேர் கலந்து கொண்டதாகவும், அவர்களில் 20க்கும் மேற்பட்ட IAS அதிகாரிகள், அவர்களது குடும்பத்தினரும், 22 டிரைவர்களும் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிகழ்ச்சிக்கான மொத்த செலவு ரூ.1.22 லட்சமாக இருந்ததாகவும், அந்த மதிப்பீடு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது. அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்பங்களுக்கான உணவு ப்ளேட் ஒன்றுக்கு ரூ.1000 என ரூ.75,000 வசூலிக்கப்பட்டது.

மேலும் ஜிஎஸ்டியாக ரூ.22,350 மற்றும் டிரைவர்களுக்கான உணவுக்காக ரூ.12,870 செலவழிக்கப்பட்டுள்ளது. இந்த தொகையை மாநில பொதுப்பணித் துறை (GAD) செலுத்த வேண்டுமா என கேள்விகள் எழுந்ததால், கட்டணம் இதுவரை செலுத்தப்படவில்லை என சுற்றுலா துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த விவகாரம் அதிகாரிகள் மத்தியில் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தியுள்ளது. சிலர் “விழா ஏற்பாடு செய்தவர் தனியாக செலுத்த வேண்டும்” எனக் கூற, மற்றவர்கள் “அது அரசுச் செலவு, பிறப்பனிகள் தவிர, அரசு நியமனத்தின் கீழ் அந்த அதிகாரிக்கு அத்தகைய நிகழ்வுகள் நடத்த அனுமதி உண்டு” என ஆதரவு தெரிவித்துள்ளனர்.

ஆனால், பாஜக எம்எல்ஏ விக்ரம் தாக்கூர் இந்த நிகழ்வை “ஜனநாயக மதிப்புகள், ஒழுக்க நெறிகள் மற்றும் நிர்வாக ஒழுக்கத்திற்கு எதிரானது” என கடுமையாக விமர்சித்துள்ளார். மாநில அரசு ஏற்கனவே ரூ.1 லட்சம் கோடி கடனில் சிக்கியுள்ள நிலையில், இந்த வகை தனிநபர் மகிழ்ச்சிக்காக அரசுப் பணம் செலவழிப்பது பொறுப்பற்ற செயலாகும் என அவர் குற்றம்சாட்டினார்.

மேலும், இது 1964-ஆம் ஆண்டின் மத்திய சிவில் சேவை நடத்தல் விதிகளை மீறுவதாகவும், அரசு ஊழியர்களிடம் எதிர்பார்க்கப்படும் நேர்மை மற்றும் நியாயமற்றதொரு செயலாகவும் கூறினார். “பொதுநலத்தையும் வெளிப்படைத்தன்மையையும் பாதுகாக்க வேண்டியவர்கள் தான் இன்று நிதி ஒழுக்கம் மீறி மக்களின் நம்பிக்கையை சிதைக்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.