மும்பையில் உள்ள கல்யாண்பகுதியில் ஹௌரா- மும்பை கீதாஞ்சலி எக்ஸ்பிரஸ் ரயிலில் சமூக சேவகர் சத்யஜித் பர்மன் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி பயணம் செய்தார். அப்போது ரயில் பத்மனேரா பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தபோது சில பயணிகள் பேன்ட்ரி கார் ஊழியர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டிருந்தனர்.

இதனை கவனித்த பர்மன் அவர்களிடம் விசாரித்தபோது, ஐ.ஆர்.சி.டி.சி ஊழியர்கள் நிர்ணயித்த அளவை விட உணவை மிகக் குறைவான அளவில் வழங்குவதாகவும், அதற்கு அதிக பணம் கேட்பதாகவும் குற்றம் சாட்டினர். இதுகுறித்து பேன்ட்ரிக் காரில் உணவை எடை அளவீடு செய்ய பர்மன் மற்றும் அவருடன் மூன்று பயணிகள் சென்றுள்ளனர்.

பொட்டலங்களை எடை போடுவதற்காக பேன்ட்ரி காருக்குள் பர்மன் மற்றும் மூன்று பயணிகள் சென்றதும் பேன்ட்ரி கார் மேலாளர் பயணிகளை தூண்டிவிட்டு அழைத்து வருவதாக பர்மனின் மொபைல் போனை பறித்து, அவரைத் தாக்கி வலுக்கட்டாயமாக பேன்ட்ரி யூனிட்டுக்குள் உட்கார வைத்தார்.

மேலும் பர்மன் உடன் வந்த மூன்று பயணிகளையும் மிரட்டி அவர்களது பெட்டிக்கு அனுப்பி வைத்தனர். அதன் பிறகு விரட்டியடிக்கப்பட்ட பயணிகளில் ஒருவர் ஆர்.பி.எப் ஹெல்ப்லைன் எண்ணை தொடர்பு கொண்டு புகார் அளித்தார். அந்தப் புகாரின் பேரில் வந்த பாதுகாப்பு அதிகாரிகள் பர்மனை அங்கிருந்து மீட்டு அவரது பெட்டிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து மறுநாள் பர்மன் கல்யாண்ஜி.ஆர்.பிக்கு சென்று பேன்ட்ரி ஊழியர்கள் ஏழு பேர் மீது புகார் அளித்தார். ஆனால் இந்த சம்பவம் பத்னேரா ஜி.ஆர்.பியின் அதிகாரத்திற்கு கீழ் வருவதால் அவர்கள் பத்னேராவிற்கு வழக்கை மாற்றினர். இதனையடுத்து இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்யப்பட்டு பேன்ட்ரி மேலாளர் ரஞ்சித் பெஹாரா, சுமன் கரன் மற்றும் 5 பேர் உட்பட 7 ஐ.ஆர்.சி.டி.சி ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் குறித்து ரயில்வே ஆர்வலரான சமீர் ஜவேரி, ஐ.ஆர்.சி.டி .சி யால் நியமிக்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் பயணிகளிடம் கொள்ளையடிக்கிறார்கள். அவர்களுக்கு எதிராக குரல் எழுப்புவபர்களையும்  தாக்குகிறார்கள் என்பதை இந்த சம்பவம் தெளிவாக காட்டுகிறது. எனவே ரயில்வே துறை அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், அவர்களின் சேவைகளில் வெளிப்படைத்தன்மையை கொண்டு வரவும் திடீர் சோதனைகளை மேற்கொள்ளவும் கோரிக்கை விடுத்துள்ளார்.