
பிரபல நிறுவனங்களின் ஊழியர்கள் தங்களுக்கு கிடைக்கும் நேரங்களில் டேக்ஸி, ஆட்டோ ஓட்டுநர்களாக பணிபுரியும் அனுபவம் குறித்து பெண் ஒருவர் வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்தப் பதிவில் பெங்களூருவை சேர்ந்த பெண் சார்மிகா நாகல்லா சமீபத்தில் ஒரு பைக் டாக்ஸி பயணத்தை மேற்கொண்ட போது அந்த பைக்கின் ஓட்டுனர் மிகப் பிரபலமான இன்ஃபோசிஸ் நிறுவனத்தின் ஊழியர் என்பதை கேட்டதும் அதிர்ச்சி அடைந்தார்.
மேலும் தொடர்ந்து அவரிடம் பேசிக் கொண்டே வந்த போது அவருக்கு இதுதான் பைக் டாக்ஸி ஓட்டுனராக வேலை செய்யும் முதல் நாள் என்பது தெரிய வந்தது. அதன் பின் தான் இன்போசிஸ் நிறுவனத்தின் ஒப்பந்த மேலாண்மை பிரிவில் பணியாற்றும் ஊழியர் என தெரிவித்தார்.
வார இறுதி நாட்களில் அதிகாலை நேரத்தில் வெறுமனே மொபைலில் நேரத்தை வீணாக்காமல் இது போன்று டாக்ஸி ஓட்டி கூடுதல் வருமானம் சம்பாதிக்க வேண்டும் என்று இந்த வேலைக்கு வந்ததாக அந்த பெண்ணிடம் கூறியுள்ளார். இதேபோன்று சார்மிகா மற்றொரு பைக் டேக்ஸி ஓட்டுநருடன் பயணம் மேற்கொண்டபோது அவரது பைக் மிகவும் உயர்தர பைக்காக இருந்ததால் அவரிடம் விசாரித்துள்ளார்.
அப்போது அந்த பைக் டாக்ஸி ஓட்டுனர் தான் ஒரு பி2 பி நிகழ்ச்சி மேலாண்மை நிறுவனத்தில் வேலை செய்பவர் என்றும் வேலை முடிந்து வீடு திரும்பும் வழியில் யாரையாவது அழைத்து செல்லும்போது தனிமையை குறைக்கலாம் என டாக்ஸி ஓட்டுவதாகவும் தெரிவித்துள்ளார். இந்த பைக் டாக்ஸி அனுபவங்களை பகிர்ந்த சார்மிகா அதிக ஊழியம் வாங்கும் நிலைமை மாறி தனிமையே நவீன காலத்தில் தொற்றுநோயாக அதிகரித்து வருகிறதா? என கேள்வியும் எழுப்பியுள்ளார்.இந்த பதிவு சமூக வலைத்தளங்களில் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.