
திண்டுக்கல்லை சேர்ந்த ஆறுமுகம் என்பவர் கோவை செட்டிபாளையம் பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி இருந்தார். இவர் லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார். அவருடன் கேரள மாநிலத்தைச் சேர்ந்த செல்வம் என்பவரும் தங்கி இருந்தார்.
கடந்த மார்ச் மாதம் 25-ஆம் தேதி ஆறுமுகமும் செல்வமும் இணைந்து மது குடித்தனர். அப்போது செல்வம் டிவியில் அதிக சத்தம் வைத்து பாட்டு கேட்டுள்ளார். உடனே ஆறுமுகம் தூங்க வேண்டும் பாட்டு சத்தத்தை குறைக்குமாறு கூறியுள்ளார்.
இதனால் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் கோபமடைந்த செல்வம் மது பாட்டிலால் ஆறுமுகத்தை சரமாரியாக குத்தினார். இதனால் படுகாயமடைந்த ஆறுமுகம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குபதிவு செய்து போலீசார் தலைமறைவாக இருந்த செல்வத்தை தேடி வந்தனர். இன்று மதுக்கரை பகுதியில் இருக்கும் டாஸ்மாக் கடையில் மது குடித்துவிட்டு செல்வம் பாலத்தில் நடந்து சென்றார்.
அப்போது ஆம்புலன்ஸ் சத்தத்தை கேட்டு போலீஸ் வாகனம் என நினைத்தார். உடனே பாலத்தில் இருந்து கீழே குதித்ததால் அவரது காலில் படுகாயம் ஏற்பட்டது. அவருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இதனையடுத்து போலீசார் செல்வத்தை கைது செய்து நீதிபதி முன்பாக ஆஜர்படுத்தி கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அவர் மீது ஏற்கனவே 17-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.