
உத்தரப் பிரதேச மாநிலம் மதுராவில், சாலைப் பாதுகாப்பு போலீசார் ஒரு பெரும் மோசடி செயலில் ஈடுபட்ட நபரை கைது செய்துள்ளனர். அதாவது ஹரிஷ் குமார் எனப்படும் சௌரப் ஸ்ரீவாஸ்தவா என அறியப்படும் இவர், தன்னை மத்திய இராணுவ பாதுகாப்புப் படை (CRPF), எல்லைப் பாதுகாப்புப் படை (BSF), குற்றப்பிரிவு அதிகாரி என பொய் கூறி பலரை ஏமாற்றியுள்ளார். வேலைவாய்ப்பு மற்றும் திருமண வாக்குறுதிகளின் பெயரில் பல பெண்களை ஏமாற்றியுள்ளார்.
ஒரு பெண் அளித்த புகாரை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்த, சௌரப்பின் பல்வேறு மோசடி நடவடிக்கைகள் வெளிச்சத்துக்கு வந்தன. போலீசாரின் தகவலின்படி, இவர் ஏற்கனவே திருமணமாகியிருந்தாலும், பல பெண்களுக்கு வேலை வாய்ப்பு மற்றும் திருமண வாக்குறுதி அளித்து ஏமாற்றியுள்ளார். இவர் CRPF உதவி கமாண்டராக போலியாக தன்னை அடையாளப்படுத்தி, பலரிடமும் நம்பிக்கை பெற்று மோசடி செய்துள்ளார். இது மட்டுமல்லாமல், இவருக்கு இது முதல் கைது அல்ல; முன்னதாக அலஹாபாத்திலும் கைது செய்யப்பட்டிருந்தார் என SP அரவிந்த் குமார் தெரிவித்துள்ளார்.
விசாரணையின் போது, போலியான CRPF யூனிஃபாரம், பெயர் பலகை, ஓட்டுநர் உரிமம், ஏராளமான ஆதார் அட்டைகள், போலி காசோலைகள், இரு மொபைல் போன்கள், லேப்டாப் மற்றும் ஒரு பிரெஸா காருடன் பல ஆதாரங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. தனியார் காப்பீட்டுக் நிறுவனத்தில் முகவராக பணியாற்றி வந்த இவர், போலீஸ் மற்றும் ராணுவ முகாம்களுக்கு சென்று புகைப்படங்கள், வீடியோக்களை எடுத்து, வேலைவாய்ப்பு அளிப்பதாக கூறி மோசடி செய்துள்ளார். மேலும் பல பெண்களை போலியான திருமண வாக்குறுதிகளால் ஏமாற்றியிருக்கக் கூடும் என்பதால், போலீசார் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.