கள்ளக்குறிச்சி மாவட்டம் கல்வராயன் மலை அருகேயுள்ள எருக்கம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த கூலித்தொழிலாளி சந்திரன் மகன் தங்கதுரை (22) என்பவரும், அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமியும் காதலித்து வந்தனர். இந்த நிலையில் திருமணம் செய்வதாக ஆசை வார்த்தைகள் கூறி தங்கதுரை, சிறுமியுடன் தனிமையில் இருந்துள்ளார்.

சமீபத்தில், அந்தச் சிறுமிக்கு வாந்தி, மயக்கம் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டதை அடுத்து மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டபோது, அவர் 2 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தங்கதுரையை தொடர்பு கொண்டு, திருமணம் செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

ஆனால் தங்கதுரை மறுப்பு தெரிவித்ததால், மனமுடைந்த சிறுமி வீட்டில் வைத்திருந்த விஷத்தை அருந்தி தற்கொலைக்கு முயன்றார். உடனே அவரை குடும்பத்தினர் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு அவசர சிகிச்சை அளிக்கப்பட்டும், சிறுமி சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிறுமியின் பெற்றோர் கரியாலூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதன்பேரில், போலீசார் தங்கதுரையை கைது செய்து, போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.