
தமிழகத்தில் அடுத்து வரும் 2026 தேர்தலில் நான்கு முனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படுகிறது. அதன்படி திமுக கூட்டணி, பாஜக கூட்டணி,அதிமுக மற்றும் தமிழக வெற்றிக்கழகம் என நான்கு முனை போட்டிகள் நிலவும் என்று கூறப்படும் நிலையில், அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. அதன் பிறகு நடிகர் விஜய் புதிதாக கட்சி தொடங்கியுள்ள நிலையில் அடுத்து வரும் 2026 தேர்தலில் திமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் இடையே மட்டும்தான் போட்டி என்று கூறியது தமிழக அரசியல் வட்டாரத்தில் புயலைக் கிளப்பியுள்ளது.
இந்நிலையில் பிரபல சி வோட்டார் தமிழகத்தில் விரும்பக்கூடிய முதல்வர்கள் குறித்து கருத்து கணிப்பு நடத்தியது. இந்த கருத்துக்கணிப்பில் 27% வாக்குகளுடன் முதல்வர் ஸ்டாலின் முதலிடத்தில் இருக்கிறார். இதில் ஆச்சரியப்பட கூடிய விஷயம் என்னவென்றால் 18 சதவீத வாக்குகளுடன் விஜய் இரண்டாம் இடத்தில் இருக்கிறார்.
அதன் பிறகு எதிர்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி 10 சதவீத ஆதரவுடன் மூன்றாம் இடத்திலும் பாஜக கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை 9 சதவீத ஆதரவுடன் நான்காம் இடத்தில் இருக்கிறார். இந்த கருத்துக்கணிப்பு முடிவுகள் மீண்டும் ஸ்டாலின் தலைமையை மக்கள் விரும்புவதை காட்டுகிறது. அதே நேரத்தில் விஜய் அண்ணாமலை மற்றும் எடப்பாடி பழனிச்சாமி ஆகியோரை பின்னுக்கு தள்ளி இரண்டாம் இடத்திற்கு முன்னேறியதால் எதிர்க்கட்சித் தலைவர் அந்தஸ்தை பிடிக்கப் போகிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அடுத்து வரும் தேர்தலில் கண்டிப்பாக வெற்றி பெறுவேன் என்று விஜய் கூறி வரும் நிலையில் அவர் சொன்னதற்கு ஏற்றபடி கருத்துக்கணிப்பு முடிவுகளும் இருக்கிறது. மேலும் இதனால் 2026 ஆம் ஆண்டு அரசியலில் கண்டிப்பாக போட்டிக்கு பஞ்சம் இருக்காது என்றும் தேர்தல் களம் இப்போதே சூடுபிடிக்க தொடங்கிவிட்டது என்றும் நன்றாக தெரிகிறது.