
தெலுங்கானா மாநிலத்தில் ஹைதராபாத் பகுதியில் 3 குழந்தைகள் உயிரிழந்த நிலையில் தாய் சிகிச்சை பெற்று வரும் சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதாவது ஹைதராபாத் மாவட்டத்தில் லாவண்யா என்பவர் தனது கணவர் மற்றும் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். லாவண்யா அமீன்பூர் பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமை இரவு லாவண்யா தயிர் சாதம் செய்துவிட்டு தனது 3 குழந்தைகளையும் சாப்பிடுவதற்காக அழைத்துள்ளார்.
அப்போது அவரும் அவருடைய குழந்தைகளும் தயிர் சாதம் சாப்பிட்ட நிலையில் அவருடைய கணவர் சென்னையா மட்டும் வேறு உணவு பரிமாறியுள்ளார். அதன் பின் அனைவரும் தூங்க சென்ற நிலையில் திடீரென அதிகாலை 3 மணிக்கு லாவண்யாவுக்கு கடுமையான வயிற்று வலியால் துடித்தார். இதனால் அவரை அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் அருகில் இருந்த மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். பின்னர் அங்கு சிகிச்சை பெற்றுவிட்டு வீடு திரும்பிய நிலையில் அவரது 3 குழந்தைகளும் படுக்கையறையில் மூச்சு பேச்சு இல்லாமல் உயிரிழந்த நிலையில் கிடந்தனர்.
இதனைக் கண்ட குழந்தையின் பெற்றோர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். இந்த தகவல் காவல் நிலையத்தில் தெரிவிக்கப்பட்ட நிலையில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் குழந்தையின் உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அதன் பின் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் குடும்பப் பிரச்சனை காரணமாக இரவு சாப்பிட்ட தயிர் சாதத்தில் தாய் லாவண்யா விஷம் கலந்தாரா ? என்ற சந்தேகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.