
பெங்களூருவில் செயல்படும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிட்டெட் (BEL) நிறுவனத்தில் பணியாற்றும் இன்ஜினியர் தீபராஜ் சந்திரா (36) மீது, பாதுகாப்பு தொடர்பான முக்கிய தகவல்களை பாகிஸ்தானின் உளவுத்துறையுடன் தொடர்புடைய நபர்களிடம் கசிய விட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இவர் BEL நிறுவனத்தின் தயாரிப்பு மேம்பாடு மற்றும் புதுமை மையத்தில் (PDIC) பணியாற்றி வந்தார். BEL நிர்வாகம் அவரை கடந்த வியாழக்கிழமை சஸ்பெண்ட் செய்துள்ளது. அவருடைய டிஜிட்டல் சாதனங்கள் அனைத்தும் பாதுகாப்பு ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. “Cloud Investigation and Response Automation” எனும் உயர் தொழில்நுட்பம் மூலம் அவர் தகவல்களை எவ்வாறு பகிர்ந்தார் என்பதை சீராக ஆய்வு செய்யமுடிகிறது.
இந்நிலையில் கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தானின் உளவுத்துறையுடன் தொடர்புடைய சிலர், பெண் அடையாளத்தில் தீபராஜுடன் ஆன்லைனில் நட்பாக பழகி , பாதுகாப்பு தொடர்பான தகவல்களை கேட்டு தெரிந்து கொண்டுள்ளனர். இது தொடர்பாக, பாதுகாப்பு இயங்குதளங்கள், தகவல்தொடர்பு அமைப்புகள், மெஷின் விவரங்கள், அலுவலக அமைப்பு வரைபடங்கள் மற்றும் சில உயர் அதிகாரிகள் பற்றிய தகவல்களையும் அவர் பகிர்ந்துள்ளதாக தெரியவந்துள்ளது. இதற்காக, இவருக்கு சுமார் ரூ.25,000 மதிப்புள்ள பிட் காயின் (Bitcoin) மூலம் பணம் செலுத்தப்பட்டதாக கூறப்படுகிறது.
தீபராஜ் சந்திரா, பாகிஸ்தானிய உளவுத்துறை தொடர்புடைய நபர்களுடன் ஒரே இமெயில் கணக்கு மற்றும் பாஸ்வேர்டைப் பகிர்ந்து கொண்டு, தகவல்களை டிராப்ட் ஃபோல்டரில் பதிவேற்றம் செய்து பகிர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. இது எதிரிகளால் அணுகப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், வேலைக்குச் செல்லும்போது அவர் பலமுறை பென் டிரைவுகளை எடுத்துச் சென்றதாகவும், இது அந்த நிறுவனத்தில் கடுமையாக தடை செய்யப்பட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் BEL நிறுவனம் ஒரு விசாரணைக் குழுவை அமைத்து, ராணுவ உளவுத்துறை, நாட்டு உளவுத்துறை (IB) மற்றும் மாநில உளவுத்துறை அதிகாரிகளுடன் இணைந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறது.